மயிலாடுதுறையில் நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நகராட்சியாக இருந்து சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை கிடைக்காது எனக் கூறி, ரூரல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடியுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.