Also Watch
Read this
சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றும்போது மேயர் பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி இடையே ஈகோ மோதல் வெளிப்பட்டதால் அங்கிருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வுக்கு புரோட்டாகால் தெரியவில்லை என மேயர் கூறிய நிலையில், மேயர் பிரியா தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாக எம்.எல்.ஏ. பல்லவி குற்றம் சாட்டியுள்ளார்.

மேயர் பிரியா VS தவெக எம்எல்ஏ பல்லவி
சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி, மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் கற்பகம், மாநகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ பல்லவிக்கு குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் அவரும், மேயர் பிரியாவும் சேர்ந்து ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தனர். மேயர் பிரியா ரிப்பன் வெட்டுவதற்குள், எம்.எல்.ஏ. பல்லவி ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். அப்போது மேயர் பிரியாவின் முகம் வாடிப் போனது.

வெளியேறிய எம்எல்ஏ
பின்னர், வகுப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கின் முதல் திரியை மேயர் பிரியா ஏற்ற, இரண்டாவது திரியை ஏற்றுவதற்காக எம்எல்ஏ பல்லவி கையை நீட்டினார். ஆனால், அவரை தாண்டி நின்று கொண்டிருந்த இணை ஆணையர் கற்பகத்திடம் மெழுகுவர்த்தியை கொடுத்து ஏற்ற வைத்தார் மேயர். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத எம்எல்ஏ பல்லவி முகம் வாடியபடியே வருத்தத்துடன் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்.. இணை ஆணையர் கற்பகம் உட்பட நிகழ்ச்சியில் இருந்த அனைவருமே மேடம் போக வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால், மேயர் பிரியா ஒருவார்த்தைகூட எம்எல்ஏ-வை அழைக்கவில்லை.

என்ன சொல்கிறார் மேயர் பிரியா?
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மேயரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஒன்றாக சேர்ந்துதான் ரிப்பன் வெட்டினோம் எனவும் முதலில் மேயர், அடுத்து ஐஏஎஸ், அதன்பிறகு தான் எம்எல்ஏ குத்து விளக்கேற்ற வேண்டும், அதுதான் PROTOCOL, அந்த PROTOCOL எம்எல்ஏ பல்லவிக்கு தெரியவில்லை, அதற்குள் எதிர்வினையாற்றிவிட்டதாக கூறினார். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மேல்தான் மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் வருவாரா? என மீண்டும் கேள்வி எழுப்பியபோது அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் விறுவிறுவென காரில் ஏறினார் மேயர்.
அடுத்த நிகழ்ச்சியிலும்...
இதனை தொடர்ந்து, திரு.வி.க.நகர் நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் ஒன்றாவது தெருவில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு சென்றார் மேயர் பிரியா. அங்கு, முதலில் குத்துவிளக்கேற்றிய அவர் இரண்டாவதாக எம்எல்ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்து ஏற்றுமாறு கூறினார். ஆனால், அவரது முகத்தில் மருந்துக்குக்கூட கனிவை காணாத எம்எல்ஏ நீங்களே ஏற்றுங்கள் எனக்கூறி மறுத்துவிட்டார்.

என்ன செய்ய முடியும்?
இதனை தொடர்ந்து மேயரை மைக்குகளால் சுற்றி வளைத்த செய்தியாளர்கள், கேள்விக்குமேல் கேள்வி எழுப்பினர்.. முதல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பேசியபோது மேயரின் குரலில் இருந்த ஒரு எனர்ஜி, 2ஆவது நிகழ்ச்சிக்குப்பின் அப்படியே சாந்தமாக மாறியது. பதில் சொல்ல முடியாமல் சில நிமிடங்கள் திக்கித் திணறிய அவர், 8.45 மணிக்கே வர வேண்டிய நிகழ்ச்சிக்கு 9 மணிக்கு தான் பல்லவி வந்ததாகவும், அதுவரை காத்திருந்து தானே ரிப்பன் வெட்டினோம்? அப்படி புறக்கணிப்பதாக இருந்தால் முன்கூட்டியே வெட்டியிருக்க மாட்டோமா? வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறவர்களை என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்.

ஏன் இப்படி அவமதிப்பு செய்தார்?
இது என்ன புது மெழுவர்த்தி பஞ்சாயத்து? இருவருக்குள்ளும் ஈகோ தலைதூக்கி உள்ளதா? என பலரும் பேச ஆரம்பிக்க நடந்த விவரத்தை நியூஸ் தமிழுக்கு விளக்கமாக கொடுத்துள்ளார் எம்எல்ஏ பல்லவி. நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே மேயர் தன்னை அவமதிப்பதிலேயே குறியாய் இருந்ததாகவும், வேண்டுமென்றே அவமதித்ததாகவும் குற்றம்சாட்டிய பல்லவி, நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஐடியா இல்லையென கூறிவிட்டு மேயர் பிரியா ஏன் இப்படி அவமதிப்பு செய்தார்? என பள்ளி தரப்பில் இருந்துகூட குறைபட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

மரியாதை இதுதானா?
ரிப்பன் வெட்டுவதும், குத்து விளக்கேற்றுவதும் தான் பெருமை என்றில்லை மாறாக மக்கள் பணி செய்வதே நோக்கம் எனக்கூறிய எம்எல்ஏ பல்லவி, இங்காவது ஏற்றுங்கள் என ஏதோ விட்டுக்கொடுப்பது போல் கூறியதால்தான் 2ஆவது நிகழ்ச்சியில் தான் குத்து விளக்கேற்ற மறுத்ததாகவும் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு எம்எல்ஏவுக்கு அவர் கொடுக்கும் மரியாதை இதுதானா? இன்னமும் அவர்களின் ஆதிக்கம் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார்களா? மக்களுக்கு சேவை செய்வது நோக்கமில்லையா? என கேள்வி எழுப்பினார்.

PROTOCOL பாடம்
மேயரிம் மக்கள் ஏதாவது கேட்டால்கூட ஓட்டு போட்டது தவெகவிற்கு தானே அவர்களிடமே போய் கேளுங்கள், தங்களிடம் ஏன் கேட்கிறீர்கள் என சில்லித்தனமாக நடந்துகொள்வதாக கூறும் எம்எல்ஏ, தங்களை தற்குறி எனக் கூறிவிட்டு தற்போது அவர்களே தற்குறிபோல் நடந்துகொள்வதாக விமர்சனம் செய்தார். மேலும், மேயரின் PROTOCOL படியே பார்த்தாலும் 2ஆவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஏன் மெழுவர்த்தியை 2ஆவதாக தனக்கு கொடுத்தார்? ஆன் தி வேயில் யாரோ ஒருவர் PROTOCOL பாடம் எடுத்திருக்கலாம், அதனால் PROTOCOL-ஐ சரிசெய்திருக்கலாம் என கிண்டலடிக்கும் தொனியில் பேசினார்.

மகிழ்ச்சி ஒளி வீசும்
இப்படி மேயரும், எம்எல்ஏவும் மெழுகுவர்த்தி பஞ்சாயத்தை கூட்ட உண்மையிலேயே மெழுகுவர்த்தி ஏற்றும் PROTOCOL தான் என்ன? என கேள்வி எழுப்பும் பலரும் இருவருமே ஈகோவை தூக்கி ஓரம் வைத்துவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்தினால் அவர்களின் வாழ்க்கையில் மெழுவர்த்தி போன்று மகிழ்ச்சி ஒளி வீசும் என கூறி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved