கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கால், தரைப்பாலம் மூழ்கியதால், 10 கிமீ சுற்றி பயணிக்கும் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அருகே தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குப்பம் கண்டிகை பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து, முழுமையாக மூழ்கியது. குப்பம் கண்டிகை, மணவூர் ரயில் நிலையம், திருவள்ளூர், கடம்பத்தூர், ஜாகிர் மங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இந்த தரைப் பாலத்தை கடந்து செல்ல முடியாமல், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி, பொது மக்கள் செல்கின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்களிடம் பல முறை, மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பம் கண்டிகை பகுதியில் உள்ள தரைப் பாலத்தை சரி செய்து, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.