கடந்த 12 ஆண்டுகளாக, தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் வீடுகளை சூழ்ந்து நிற்பதால் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பொது மக்கள், முழங்கால் அளவிற்கு மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து கொண்டு, கடலுக்கு நடுவில் வீடு கட்டி வாழ்வது போல் உள்ளதாக கூறுகின்றனர். நாராயணபுரம் மற்றும் கீழ் குப்பம் கிராமங்களில் உள்ள மலை பகுதியில் இருந்து மழை நீர் முழுவதுமாக பாய்ந்து அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளது. அத்தியாவசிய பொருள் வாங்குவதற்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், ஊராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.