Also Watch
Read this
தஞ்சை, சாலியமங்கலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற பரப்புரை வாகனத்தில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். திருவாரூருக்கு பரப்புரைக்கு சென்ற போது, நடு வழியில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவாரூரில், இன்று மார்ச்31ஆம் தேதி மாலை, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு, மு.க.ஸ்டாலின் வந்தார்.

அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக திருவாரூர் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும், இந்த வாகனத்தில் உடன் இருந்தனர்.

பறக்கும் படையினர் சோதனை
தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் நாலு ரோடு பகுதியில் வாகனம் சென்றபோது அங்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், முதல்வர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வாகனத்தின் உள்ளே சென்று, அங்கு இருந்த பைகள், உடைமைகளை திறந்து சோதனையிட்டனர்.

இந்தச் சோதனை ஓரிரு நிமிடம் நீடித்தது. வாகனத்தின் முன்சீட்டில் அமர்ந்து இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பறக்கும் படையினருக்கு ஒத்துழைப்பு தந்தார். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்குப் பின்னர், திருவாரூர் நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

23ஆம் தேதி தேர்தல்
தமிழகத்தில், வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய்க்கும் மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்படும் ரொக்கப் பணம் , பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அவற்றை திருப்பிக் கொடுத்தும் வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved