திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என கூறி, பயிர் சேதமடைந்த புகைப்பட பதாகைகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழவேற்காடு-காட்டூர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, ஆரணி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால், காட்டூர் கிராமத்தில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. இந்த நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், காட்டூர் பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.