திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கும் தீ பரவியது. திருப்பூர் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோவில் அருகே விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான வரிசை வீட்டில் குடியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மதியம் சமையல் செய்து சாப்பிட்டு விட்டு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால், 4 வீடுகளின் ஓடுகள் முழுமையாக சேதமடைந்தன. அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கும் தீ பரவியதில், பனியன் துணிகள் மற்றும் கட்டடம் தீக்கிரையானது. திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்கள் மூலம் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.