உறங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது தாக்குதல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் 80 விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சண்முகத்தின் மனைவி உயிரிழந்தார். இதனால் சண்முகம் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சண்முகம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலில் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி உள்ளனர். இதனால் திருடர்கள் வந்திருப்பதை அறிந்த சண்முகம் வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளே இருந்துள்ளார். திருட வந்த மர்ம நபர்கள் நீண்ட நேரமாக போராடி வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பாட்டிலால் சண்முகத்தின் தலையில் தாக்கியுள்ளனர். இதனால் தலையில் படுகாயம் அடைந்து சண்முகம் மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் வீடு முழுவதும் சோதனை செய்து சண்முகம் பெட்டியில் வைத்திருந்த தனது மனைவியின் 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 2000 ரூபாய் பணத்தை திருடிவிட்டு சண்முகத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதிகாலை பக்கத்து தோட்டத்து விவசாயி சண்முகம் வீட்டின் அருகே சென்ற போது சண்முகத்தின் அலறல் குரல் கேட்டதால் அங்கு சென்று பார்த்தபோது சண்முகத்தின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது தெரிந்து அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Related Link கோயில் தேரை நிறுத்த இடவசதி கோரி பொதுமக்கள் மனு