Also Watch
Read this
By: Fyrose Banu

இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது இன்று தங்கம் விக்கிற விலையைப் பார்த்தால் தெரியும். இவர் நேர்மையின் ரோல் மாடல் என கீழே கடந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு நடந்த பாராட்டு விழாவில் வருவாய் கோட்டாட்சியர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கீழே கண்டெடுத்த 20 சவரன் நகைகள்
திருவாரூர் விருப்பாச்சி நடப்பு தெருவில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த இருபது சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை ஆட்டோவில் செல்லும்போது தவறவிட்ட நிலையில் அதனை கண்டெடுத்த திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் துரை என்பவர் அதனை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

குவியும் பாராட்டும், பரிசும்
இதனையடுத்து அந்த நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியாளர் துரையின் நேர்மையை பாராட்டி பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஆண்டி தோப்பு பகுதியில் தமிழ்நாடு ஷெட்டியுல் ட்ரைப்ஸ் காட்டுநாயக்கன் சமூக சீர் திருத்த சங்கம் சார்பில் தூய்மை பணியாளர் துரைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூய்மையின் சிகரம்
இதில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்யா கலந்துகொண்டு தூய்மை பணியாளர் துரைக்கு நினைவு பரிசை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் இன்றைக்கு தங்கம் விற்கும் விலையை பார்த்தாலே இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும். இன்று ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் தங்கத்தின் விலை ஒரு கிராம் எவ்வளவு போயிருக்கிறது என்று பார்க்கும்போது ஒரு கிராம் கிடைத்தால் கூட அதனை விற்று எவ்வாறு வீடு கட்டலாம், பாதிக்கப்பட்ட மகனுக்கு எவ்வாறு செலவு செய்யலாம் என்று யோசிக்காமல் அதை தொலைத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று எண்ணி அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

நேர்மையின் ரோல் மாடல்
இந்த உயர்ந்த உள்ளத்துக்காக அவரை இன்று நாம் எவ்வளவு பேர் பாராட்டி வருகிறோம். இப்போது இருக்கிற சூழ்நிலையில் கதைகளில் இருந்து என்பதை விட நிஜத்தில் மனிதர்களிடமிருந்து ஒரு ரோல் மாடல் தேவைப்படுகிறது. அந்த வகையில் நேர்மையின் ரோல் மாடலாக தூய்மை பணியாளர் துரை இருக்கிறார் என்று பாராட்டி பேசினார்.

பொன்னாடை போர்த்தி பாராட்டு
திருவாரூரில் இயங்கி வரும் ஈர விழிகள் என்கிற அமைப்பு தூய்மை பணியாளர் துரையை வரவழைத்து அவருக்கு 5,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கமும் கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்சியில் நகர் மன்ற உறுப்பினர் ரஜினி சின்னா வாரை பிரகாஷ் உள்ளிட்ட ஈர விழிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved