திண்டுக்கல்லில், 7 மாத கருவை கலைக்க நடைபெற்ற முயற்சியில், உடல்நிலை பாதிக்கப்பட்டு 17 வயது கல்லூரி மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார், கர்ப்பத்துக்கு காரணமான நபர் யார் என்பது பற்றி விசாரித்து வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.அய்யலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், யாருடனோ நெருக்கமாக பழகியதில், கர்ப்பமடைந்த நிலையில், பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்தார். ஆனால், நாளாக நாளாக வயிறு பெரிதாகிக் கொண்டே வந்த நிலையில், 32ஆவது வாரத்தில், அதாவது 7ஆவது மாதத்தில் பெற்றோர் சந்தேகமடைந்து கேட்டபோது, கர்ப்பமாக இருந்தது அம்பலமானது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கருவை கலைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடியவே, இறுதியில் நாட்டு மருந்து வைத்தியத்தில் இறங்கினர். ஆனால், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவே, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 24ஆம் தேதி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி, செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.இந்த விவரம் வடமதுரை காவல் நிலைய போலீசாருக்கு தெரிய வரவே, தீவிர விசாரணையில் இறங்கினர். 17 வயது சிறுமியான கல்லூரி மாணவியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்பது குறித்தும், கருவை கலைக்க நாட்டு மருந்து கொடுத்து உதவி செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீஸார், அவர் யார் யாருடன் நெருக்கமாக பழகி வந்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.