சாதாரண கணவன், மனைவி சண்டை, தமிழ்நாட்டு அரசியலையே அதிர வைத்த சம்பவம், கோவையில் அரங்கேறியுள்ளது. காரில் வைத்து பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக , பெண் கடத்தப்படவேயில்லை என்ற வீடியோ வெளியாகி, இந்த சம்பவத்தில் அரசைக் கண்டித்து அறிக்கைகளை அள்ளி வீசிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ’ஐயா’ படத்தில், நடிகர் வடிவேலு நடித்துள்ள காட்சி போன்ற ஒரு சம்பவம் தான், தற்போது கோவையிலும் அரங்கேறி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது. கோவை மாவட்டம், இருகூர் அருகே பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பெண் அலறியது பதைபதைப்பை ஏற்படுத்தியிருந்தது. காரின் எண் தெளிவாக பதிவாகாததும், கடத்தல் தொடர்பாக யாரும் புகார் அளிக்காத காரணத்தினாலும் அங்கு என்ன நடைபெற்றது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. கோவை காவல் ஆணையரும் இதை காரணங்களைத் தான் கூறி இருந்தார். இருப்பினும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, கடத்தல் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். கோவையில், கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 4.5 மணி நேரமாக பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்ததால் ஏற்கனவே அனலில் அமர்ந்தார்போல் இருந்த போலீசார், கடத்தல் எனக் கூறப்பட்ட சம்பவத்தால் திடுக்கிட்டுப் போய் இருந்தனர்.பெண் கடத்தல் குறித்து சமூக வலை தளங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த போது, இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், என்ன நடந்தது என்பது குறித்து விவரித்த ஆடியோ வெளியானது. அதில், பெண் கடத்தப்பட்டது போல் தெரியவில்லை என்றும், சத்தம் மட்டுமே கேட்டதாகவும், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் பெண்ணை கழுத்தை நெரித்ததாகவும் கூறி இருந்தார்.ஆடியோ வெளியான அடுத்த சில மணிநேரத்தில், தமிழ்நாட்டு அரசியலை அதிர வைத்த சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கோவை காவல்துறை ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் இருந்தது வேறு யாருமல்ல. கடத்தப்பட்ட கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய பெண் பேசிய வீடியோ தான் அது. அதில், பேக்கரிக்கு சென்றுவிட்டு, வரும் வழியில், தனக்கும் தனது கணவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், அதில் தன்னை கணவர் தாக்கியதாகவும், தாமும் கணவரை திருப்பி தாக்கியதாகவும் கூறி, கடத்தல் சம்பவம் தொடர்பான களேபரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட சம்பவம், இறுதியில் நகைப்பை உண்டாக்கும் வகையில் முடிவுக்கு வந்த நிலையில், சமூக வலை தளங்களில் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன.இதையும் பாருங்கள் - Coimbatore News | Kidnap கிடையாதாம், போய் வேலைய பாருங்க, அரசியல் களத்தை அதிரவைத்த குடும்பச் சண்டை