சென்னையை அடுத்த எண்ணூரில், கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 இளம்பெண்கள் ராட்சத அலையில் சிக்கி, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயிலுக்கு செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு, கடற்கரையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நால்வரும் யார் யார்? அவர்கள் உயிரிழந்தது எப்படி? நண்பர்களுடன் ஒரு நாள் மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று வந்த 4 இளம்பெண்களும், கடல் அலையில் சிக்கி பலியாகி கரையொதுங்கி கிடக்கும் காட்சியை காணும் போதே மனம் பதைபதைக்கிறது.சென்னையை அடுத்த எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரையில் அடுத்தடுத்து 4 இளம்பெண்களின் சடலம் கரை ஒதுங்கியதை கண்டு அதிர்ந்து போன மீனவ மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர். கண்கள் பிதுங்கி, வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளி, கோரமுகத்துடன் காட்சியளித்த அந்த 4 சடலங்களையும் கண்டு பதறிப்போன மக்கள், அவர்கள் யாவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர்.போலீசார் வந்ததும், ஆங்காங்கே கிடந்த அவர்களது பைகள், அடையாள அட்டை என உடைமைகளை கைப்பற்றி சோதனை செய்து, 4 பேரின் உறவினர்களுக்கும் தகவலை சொல்லி வரவழைத்தனர். 4 பெண்களும் ஒத்த வயதை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், போலீசுக்கு சந்தேகம் இருந்தது. பின்னர், விசாரணையில் இறந்து போன நால்வரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள மணி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் பணியாற்றியவர்கள் என்பது தெரிய வந்தது.கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஷாலினி என்ற கல்லூரி மாணவி, பெற்றோரை இழந்து உறவினர்கள் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில், அவரது மரண செய்தி, குடும்பத்தினர் மனதில் இடியை இறக்கியது. ஆசை ஆசையாக வளர்த்து வந்த மகள், இறந்த செய்தி அறிந்ததும் அவரது பெரியப்பாவும் பெரியம்மாவும் அழுதது காண்போரை கலங்கடித்தது.கல்லூரிக்கு சென்று கொண்டே பகுதி நேரமாக, துணிக்கடையில் வேலைக்கும் சென்று வந்தார். அந்த துணிக்கடையில் பழக்கமானவர்கள் தான் தேவகி, பவானி, காயத்ரி.தீபாவளி சீசனுக்காக பணியில் சேர்ந்த மூன்று பேருடனும் நெருக்கமாக பழகி வந்த ஷாலினி, அவர்களுடன் எண்ணூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு, கடற்கரைக்கு சென்றது விசாரணையில் உறுதியாகியுள்ளது.இலங்கை அகதிகள் முகாமில், கணவரை இழந்து, இரு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்க்கையை நடத்தி வந்த தேவகியின் மரணம் அவர்களது குடும்பத்தினரை உலுக்கியதுடன், பிஞ்சுக் குழந்தைகளை ஆதரவின்றி நிர்கதியான நிலைக்கு தள்ளியுள்ளது. தேவகி தன் குழந்தையுடன் கொஞ்சி அளவளாவிய பழைய வீடியோவை பார்க்கும் போது இதயம் கனத்து போகிறது.மற்றொரு மாணவியான காயத்ரி, கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டு பலியானார் என்றதும் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அவரது தாயார் அழுத காட்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை.இதில், இன்னும் கோரம் என்னவென்றால் உயிரிழந்த நால்வருள் ஒருவரான பவானிக்கு, அண்மையில் தான் திருமணம் நடந்ததாக தெரிகிறது. இப்படி இறந்து போன நால்வரின் குடும்ப பின்னணியையும், வறுமை நிலையையும் கேட்கும் போதே பரிதாபப்பட வைக்கிறது. வீட்டில் பொய் சொல்லிவிட்டு, யாருக்கும் தெரியாமல் ஊரை சுற்ற சென்று இப்படி வாழ வேண்டிய வயதில், உயிரை தொலைத்த இந்த நால்வரின் கதையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் பாருங்கள் -பள்ளிக்கூட சிறுமிக்கு வந்த காதல், காதலனுடன் அறையில் இருந்த சிறுமி | Nigalthagavu | BengaluruCrime