Also Watch
Read this
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்து வந்த பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.

தஞ்சையில் கோலாகலம்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில்களில் 27 கருட சேவை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்தாண்டும் 27 பெருமாள்கள் கருடசேவை புறப்பாடு அதிவிமரிசையாக நடைபெற்றது.

27 பெருமாள்கள் தரிசனம்
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை கோயில்களில் இருந்து திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீமணிகுன்னப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 27 பெருமாள் கோயில்களில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு, தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் வீதிகளில் வலம் வந்து சேவை அருள்பாலித்தனர்.

பக்தர்கள் பரவசம்
நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு குடிநீர், சர்க்கரை பொங்கல், மிளகு பொங்கல், தயிர் சாதம் என விதவிதமாக அன்னதானமும் சிறப்பாக வழங்கப்பட்டது. இந்த கருட சேவையில் பஜனை பாடல்களை பாடியும், ஆடியும் பக்தர்கள் சென்றனர். இந்த பெருமாள் கருட சேவையில் உள்ளூர் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர். திருப்பதிக்கு அடுத்தபடியாக 27 பெருமாள் கருடசேவை வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும், தஞ்சையில் மட்டுமே இது நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved