தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொண்ணாப்பூரில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால் 1000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. காரான், கும்பரம், மீனாட்சி வலசை, இரட்டையூரணி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் முட்டியளவு தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். காரைக்கால் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்காக வைத்துள்ள இராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. கடற்கரையில் உள்ள நடைபாதை கடைகள் சேதம் அடைந்துள்ளதால் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பழையார் சுனாமி நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, கடும் மழையயும் பொருட்படுத்தாது சாய்ந்த இரண்டு மின்கம்பங்களையும் ஜேசிபி எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரத்தநாடு அருகே சுமார் 150 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிற்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.