Also Watch
Read this
தவெக ஆட்சியமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

நான்கு எம்எல்ஏக்கள் தயார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூரில் போட்டியிட்ட லதா மற்றும் பத்மநாதபுரத்தில் போட்டியிட்ட செல்லசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து மற்றும் தளியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆலோசனையில் இடதுசாரிகள்
இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுமே ஆதரவுக் கடிதங்களை அளித்துள்ளன.

காங், கம்யூ.க்கள் ஆதரவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.

திருமாவளவன் வருகிறார்
இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களை கொண்ட விசிக இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved