Also Watch
Read this
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து அதிமுக பொதுச் செயலாளர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல உயர் பொறுப்புகளை வகித்து சாதனை நாயகராக உருவெடுத்து நிற்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் அடியெடுத்து வைத்தது முதல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுத்துள்ளது வரை அத்தனையுமே வரலாறுகளால் நிரம்பி உள்ளது.

18ஆவது வயதில் இருந்தே...
வெள்ளந்தி சிரிப்புடன் வெல்லம் விற்றுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தனது 18ஆவது வயதிலேயே அரசியலுக்கு வந்தது எப்படி? 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக தான் தனது மூச்சு என விடாப்பிடியாக நிற்பதன் பின்னணி என்ன? 20 ஆண்டுகளாக தொடர் சரிவுகள் வந்தபோதும் துவளாமல் இருந்தது ஏன்?

எடப்பாடியில் இருந்து...
சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் தான் சிலுவம்பாளையம். ஊர் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அரசியல் ரீதியாக அறியப்பட்ட ஊர் தான் சிலுவம்பாளையம். இங்கு 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி கருப்ப கவுண்டர் - தவுசாயம்மாள் தம்பதிக்கு 2ஆவது மகனாக பிறந்த பழனிசாமி, கோனேரிப்பட்டி துவக்கப்பள்ளி மற்றும் பவானி அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தனது வீடு அமைந்திருக்கும் விவசாய தோட்டத்தில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்த பள்ளிக்கு நடந்தே சென்று படித்த பழனிசாமி, பின்னர், காவிரி ஆற்றை கடந்து சென்றுதான் கல்லூரி செல்லும் நிலை ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வாசவி கல்லூரியில் விலங்கியல் படித்த பழனிசாமி, பள்ளியில் எப்படி விளையாட்டின்மீது ஆர்வம் கொண்டிருந்தாரோ அதேபோன்று கல்லூரியிலும் கூடைப்பந்து நட்சத்திர வீரராக இருந்தார்.

அதிமுக அடிப்படை உறுப்பினர்
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பழனிசாமிக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால், கல்லூரி முடித்த நேரத்திலேயே அரசியலுக்கு பிள்ளையார்சுழி போட்டார். எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறி அதிமுக என்ற தனிக்கட்சியை துவங்கிய நேரம் அது. அதாவது 1972 அக்டோபர் 17ஆம் தேதி எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்க, தனது 18ஆவது வயதிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார் பழனிசாமி. அரசியலுக்கு சென்றாலும் அடிப்படையில் வாழ ஒரு வேலை வேண்டுமே என்றெண்ணிய அவர் அதேநேரம் அடுத்தவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதைவிட தொழில் தொடங்குவது தான் முன்னேறுவதற்கான சரியான வழியெனவும் தீர்க்கமாக முடிவெடுத்தார்.

கிளைச் செயலாளராக...
அதனால், படிப்பு சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு அலுவலக பட்டிக்கட்டுகளை ஏறி இறங்க விரும்பாத பழனிசாமி, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வெல்லத்தை விலைக்கு வாங்கி மூட்டைக்கு 2 ரூபாய் கமிஷனில் விற்பனை செய்தார். நினைத்ததுபோலவே தொழில் தொய்வை கொடுக்காமல் தோள் தூக்கியே விட்டது. ஆனாலும், அரசியல் ஆர்வம் அவரை, ஒரு இடத்தில் முடங்காதே, முயற்சி செய், நிச்சயம் முடியும் என அவரது காதை திருகி கொண்டே இருந்தது. அதனால், கண்ணில்பட்ட கறை வேட்டிகளிடம் நெருங்கி பழகினார். இதன் பலனாக பழனிசாமிக்கு கோனேரிபட்டி கிளைச் செயலாளராக மாறும் வாய்ப்பு கிடைத்தது.

ஜெயலலிதா அணியில் இபிஎஸ்
இதனை தொடர்ந்து 1986ஆம் ஆண்டு சிலுவம்பாளையம் ஊராட்சி மன்றத்திற்கு தேர்தல் நடந்தது. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பழனிசாமியால் வெற்றி பெற முடியவில்லை. தான் எதிர்கொண்ட முதல் தேர்தலே தோல்வியில் முடிந்தாலும் அதனை பெரிதாக மூளையில் ஏற்றிக்கொண்டு சோர்ந்து போகவில்லை. எடுத்தவுடனேயேவா வெற்றி கிடைத்துவிடும் என பாசிட்டிவாகவே நினைத்துக் கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டான 1987 டிசம்பர் 24ஆம் தேதியன்று, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உயிரிழந்தார். இதனால் அதிமுகவின் அடுத்த தலைமை பொறுப்பிற்கு யார் என்பதில் கட்சியின் தலை உருண்டது. இதையடுத்து, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தனித்தனி அணிகளாக பிரிந்தனர். இதில் ஜெயலலிதா அணி பக்கம் சென்றார் பழனிசாமி.

சேவல் சின்னத்தில் இபிஎஸ்
1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார் பழனிசாமி. அந்த தேர்தலில் திமுக வேண்டுமானால் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கலாம். ஆனால், பழனிசாமியை அரசியலில் முதல் வெற்றியை ருசிக்க வைத்ததே அந்த 1989 தேர்தல் தான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் எல்.பழனிசாமியைவிட 1,364 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை தனதாக்கி தனது 35 ஆவது வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்.

2ஆவது வெற்றி, எம்எல்ஏ
இதனிடையே, திமுக ஆட்சியை ஓராண்டிலேயே கலைக்கும் சூழல் உருவானது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததாகக் குற்றம்சாட்டி, பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு 1991 ஜனவரி 30 அன்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைத்தது. அதனால், 1991ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதிலும், இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடியில் களமிறங்கிய இபிஎஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குழந்தை கவுண்டரைவிட 41 ஆயிரத்து 266 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது இமாலய வெற்றியை ருசித்தார். அதோடு 1991 முதல் 96 வரை சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளுக்கும் தேர்வானார்.

அடுத்தடுத்து சரிவு
மக்கள் தன்னை 2 முறை வெற்றி பெற வைத்து அழகு பார்த்த நம்பிக்கையில் 1996 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொண்டார். ஆனால், அடுக்கடுக்கான ஊழல் புகார் மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண ஆடம்பரம் ஆகியவற்றால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாது, நடிகர் ரஜினிகாந்தும் ‘பாட்ஷா’ படத்தின் வெள்ளிவிழா மேடையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்துப் பேசியிருந்தார். இப்படி ஜெயலலிதா ஆட்சியின் மீது பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு அலைகள் எழ, அந்த தேர்தலில் திமுக கூட்டணி 221 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது. அதிலும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவே அந்த தேர்தலில் தோற்றுதான் போனார். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமியுமே 1996 தேர்தலில் தோல்வியை தழுவினார். அதன்பிறகு அடுத்தடுத்து அவருக்கு சரிவுதான்.

நாடாளுமன்ற உறுப்பினராக...
1998ல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டாலும், ஜெயலலிதாவின் மீது இருந்த பல ஊழல் வழக்குகள் மற்றும் தனிப்பட்ட அரசியல் கொள்கை வேறுபாடுகளால் பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டு, மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது. ஆனாலும், மனம் தளராமல் 1999 மக்களவை தேர்தலில் அதே தொகுதியிலேயே போட்டியிட்டார் பழனிசாமி. ம.தி.மு.கவின் கண்ணப்பனிடம் 4,556 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர் தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் தோல்வியடைந்தார். இப்படி தொடர்ந்து தோல்வியே தொற்றிக்கொண்டபோதும் ஜெயலலிதாவுக்கு பழனிசாமி மீது இருந்த நம்பிக்கை மட்டும் குறையவே இல்லை.

கொள்கை பரப்பு செயலாளர்
அதனால், 2006 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியில் களம் கண்டார். அப்படியும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த காவேரியிடம் 6,347 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைதான் சந்தித்தார். இதனிடையே, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள்தான் சற்று ஆறுதலை கொடுத்தது..
வேறொரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் தொடர் தோல்விகளால் துவண்டிருப்பார்கள். கட்சி செயல்பாடுகளிலாவது சுணக்கம் காட்டியிருப்பார்கள். ஆனால், எதைக் கண்டும் அசராமல் மீண்டும் மீண்டும் எழுந்த எடப்பாடிக்கு 2011 சட்டமன்ற தேர்தல்தான் ஒரு புதிய தெம்பையே கொடுத்தது.

இருபது ஆண்டுக்கு பிறகு...
20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சட்டமன்ற வாசலில் கால் வைத்தார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான பழனிசாமி அதிமுகவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவிலும் இடம்பிடித்தார். அடுத்து, 2016ல் மீண்டும் களம்கண்டு பொதுப்பணித்துறை அமைச்சரானார். தொடர் தோல்விகள் தன்னை துரத்தியபோதும், ஒருசேர வாய்ப்புகளும் வந்து விழுந்ததற்கு காரணம் சசிகலாவும், பழனிசாமி நம்பிக்கைக்குரியவர் என ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்து கொண்டே இருந்தது தானாம். பழனிசாமிக்கு முன்பே கட்சியில் கால் பதித்திருந்த செங்கோட்டையனையே, ஒருகட்டத்தில் வரம்புமீறிய நடவடிக்கை மற்றும் கட்சி ஒழுக்கமின்மை ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி ஜெயலலிதா ஓரங்கட்டும் நிலை ஏற்பட்டது.

முதல்வர் ஆன ஓபிஎஸ்
இந்நிலையில் 2016 டிசம்பர் 5 அன்று உடல்நலக்குறைவால் ஜெயலலிதா காலமாகவே, யாரை முதலமைச்சராக்குவது என்ற பேச்சு எழுந்தது. அப்போது பழனிசாமியின் பெயர் அடிபட்டாலும், 2001ல் டான்சி நிலபேர வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும், 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்றபோதும் 2 முறை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமே 3ஆவதாகவும் முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால், 2 மாதங்கள்கூட பன்னீர்செல்வத்தால் பதவியில் நீடிக்க முடியவில்லை. தனது ராஜினாமா கடிதத்தை அப்போதையே ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பினார். அதன்பிறகு, சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களின் கடுமையான நெருக்கடி மற்றும் கட்டாயத்தின் காரணமாகவே தான் ராஜினாமா செய்ததாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் அதோடு, சசிகலாவை முதல்வராக்குவதற்காகவே தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் கூறினார்.இதனை தொடர்ந்து, 2016 டிசம்பர் 31ஆம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றார். ஜெயலலிதா உயிரிழந்த 26ஆவது நாளே பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

முதல்வரான இபிஎஸ்
சிறை செல்லும்முன்பு தனக்கு விசுவாசியான எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றிருந்த இபிஎஸ், முதல்வராக பதவியேற்க வருமாறு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். பின்னர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபித்து, 2017 பிப்ரவரி 16 அன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார் பழனிசாமி. முதல்வரான சில மாதங்களிலேயே, கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதிமுகவில் வலிமையான தலைவராக உருவெடுத்தார்.

இரட்டை தலைமை
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்ற இரட்டைத் தலைமை அதிமுகவில் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படகில் செல்வது சாத்தியமா? ஒரே உறையில் 2 கத்திகள் இருப்பது சாத்தியமா? என்பதுபோல் 2021 சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்த ஒற்றைத்தலைமை என்ற குரல் ஓங்கியது. அதனால் 2022 ஜூலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
ஓபிஎஸ் நீதிமன்ற வாசல் ஏறியும் செல்லுபடியாகாத நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இபிஎஸ்சுக்கு இருந்ததால் 2023 மார்ச் 28 முதல் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் வாக்கு செலுத்துவதற்கு முன்பே அடிமட்ட தொண்டராக அதிமுகவில் இணைந்த பழனிசாமி 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வருகிறார். அரசியலுக்கு வந்தது முதல் தற்போதுவரை வேறு எந்த கட்சியின் வாசம்கூட இல்லாமல் அதிமுகவே தனது கடைசிமூச்சு என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தது வேண்டுமானால் வெறும் 4 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால், தான் பதவியில் இருந்தகாலத்தில் கொரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது நிலைமையைக் கையாண்டது, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது பல மேம்பாலங்கள் மற்றும் சாலை வசதிகள், டெல்டா பகுதிகளைக் காக்கும் பல்வேறு திட்டங்கள், தாலிக்கு தங்கம், குடிமராமத்துத் திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அவருக்கு நல்லபெயரையே பெற்றுத்தந்தன. அதனால், அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராகவும் மாறி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி சாட்சி
தற்போது எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படும் அவர், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய தனது அரசியல் வியூகங்களை வகுத்து சூறாவளி பிரச்சாரத்தில் சுற்றி சுழன்று வருகிறார். ஆக, ”கொடிபிடிக்கும் தொண்டரும் கோட்டையை பிடிக்கலாம்” என்பதற்கு வெள்ளந்தி சிரிப்புக்கு சொந்தக்காரரான எடப்பாடி பழனிசாமிதான் சாட்சி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved