Also Watch
Read this
கொறடா உத்தரவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்கு அளித்திருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, 6 அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் பதவி தருவதாக தவெக ஆசை காட்டி ஆதரவாக வாக்கு அளிக்க வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். கட்சியில் நிகழும் கருத்து வேறுபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒருசாரார் வீட்டுக்கு செல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தூய்மையான ஆட்சி நடத்துவோம் என சொல்லி விட்டு இப்படியெல்லாம் செய்வதா? என்றும் கூறி உள்ளார்.

தவெகவுக்கு ஆதரவு, புகார்
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது:
தவெக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அவையில் நான் பேசினேன். ஆனால், கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதிமுகவுக்கு சில எம்எல்ஏக்கள் துரோகம் செய்து உள்ளனர். கொறடா உத்தரவை மீறி, சட்டத்துக்குப் புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்து உள்ளனர். 6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசி உள்ளது. அதனால்தான் அவர்கள் ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

எந்த விதத்தில் நியாயம்? இதுதான் தூய்மையா?
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாமல், சில முன்னாள் அமைச்சர்கள் துரோகம் விளைவித்து உள்ளனர். தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நிலவும்போது ஒரு தரப்பினரைச் சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் தூய்மையா? எல்லா இயக்கங்களுக்கும் சோதனை வரும், பிரிவு வரும். ஆனால் எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்குச் செல்கிறார் முதல்வர் விஜய். இது தவறான முன்னுதாரணம்.

திமுக உடன் பேசவில்லை
108 இடங்களில் மட்டும்தான் தவெக வென்றது. விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ததால் 107 ஆனது. ஒரு எம்எல்ஏ வாக்களிக்க முடியாததால் எண்ணிக்கை 106 ஆனது. தேர்தல் பிரசாரத்தில் நான் திமுகவைத்தான் தாக்கிப் பேசினேன். அதிமுக உருவானதே திமுகவை எதிர்த்துத் தான். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற ஆசையில் சிலர், தவறான தகவலைச் கூறுகின்றனர். நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கட்சியின் அதிகாரம் என்னிடம்தான் உள்ளது. கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்குத் தான் உள்ளது. சட்டப் பேரவையில் விதி, மரபு பின்பற்றப்படவில்லை.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved