Also Watch
Read this
புதிய முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு வந்தார். முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு அலுவல்களை தொடங்கினார். அவருக்கு தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் பொறுப்பு ஏற்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் விஜய் உடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில் விஜய்
இதனை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் விஜய் வந்தார். அங்கு முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு அலுவல்களை தொடங்கினார். முன்னதாக, தலைமைச்செயலகத்தில், காவல்துறை அளித்த மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார். தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தற்காலிக சபாநாயகர் நியமனம்
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் இருந்தனர். நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளா். இதற்கான கோப்பில்,முதல்வர் விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved