Also Watch
Read this
By: Manigandan Raja

பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதி :
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில், திருவண்ணாமலை செல்வதற்காக நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்துகள் இன்றி பல மணி நேரமாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மத்தூர் வழியாக வரும் அனைத்து பேருந்துகளும் ஏற்கனவே பயணிகளால் நிரம்பி வழிவதால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால்
பேருந்துக்குள் ஏற முடியாத சூழல் நிலவுகிறது.
குறிப்பாக, கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்களும், முதியவர்களும் கடும் கூட்ட நெரிசலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இது குறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில், "பல மணி நேரமாக காத்திருந்தும் ஒரு பேருந்தில் கூட இடம் கிடைக்கவில்லை.
வரும் பேருந்துகள் அனைத்தும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் வருகின்றன. கூட்டமாகச் செல்லும் பேருந்துகளில் ஏறுவது உயிருக்கே ஆபத்தாக உள்ளது. போதிய பேருந்து வசதி இல்லாததால் எங்களது பயணம் பெரும் போராட்டமாக மாறியுள்ளது" என வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் சிரமத்தைப் போக்கவும் மத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு உடனடியாக கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகளின் இந்த நீண்ட நேரக் காத்திருப்புக்குத் தீர்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved