Also Watch
Read this
By: Manigandan Raja

அப்பளமாக நொறுங்கிய கார் :
ஆந்திரா மாநிலம் கர்னூலிருந்து கேரளம் மாநிலம் கொச்சின் நோக்கி பாரத் பெட்ரோலியம் டேங்கர் லாரி எரிபொருள் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்தது. வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த கோபி (49) என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே பொடாரம்பாளையம் பிரிவு பகுதியில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையில் சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு இளைப்பாறச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கோடீஸ்வரன் (40) என்பவர், (மாற்றுத்திறனாளி) தொழில் நிமித்தமாக கோவை நோக்கி
தனது காரில் தானே ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதி
விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிய இந்த விபத்தில் தலை துண்டிக்கப்பட்டு கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கோடீஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved