Also Watch
Read this
கூட்டணி நலனுக்காகவே காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து விலகியதாக திருமாவளவன் தகவல் தெரிவித்து உள்ளார்.
திருச்சி கிழக்கில் போட்டியா?
இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அமைச்சரவையிலே சேர முடியும் என்று தவெக தரப்பிலிருந்து எனக்கு அழைப்பு தரப்பட்டது. நம்முடைய கட்சியின் முன்னணித் தோழர்களும் 'நல்ல பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு திருச்சி கிழக்கில் கூட நீங்கள் போட்டியிட்டு வெற்றி பெறலாம்' என்று என்னிடம் வலியுறுத்தினார்கள்.

வாய்ப்பே இல்லை
எனக்குப் பதவி ஆசை இருந்திருந்தால், உடனடியாக அதற்கு நான் இணங்கி இருக்க முடியும். ஆனால், தொடக்கத்தில் இருந்தே ஆட்சியில் விசிக பங்கெடுக்காது என்ற கொள்கை முடிவில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக, எனக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்பதற்காக நான் அதற்கு ஒருபோதும் இணங்க மாட்டேன் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதும் பலபேர் திருச்சி கிழக்கிலே திருமாவளவன் போட்டியிடுகிறாரா? என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் 100 விழுக்காடு உறுதியாகச் சொல்லுகிறேன், நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன், அதற்கான வாய்ப்பே இல்லை.

என்னை விட யாரும் விமர்சிக்கவில்லை
இந்த முடிவை நான் ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்து விட்டேன்.தவெக தலைவர் விஜய் சிறுபான்மையினரின் வாக்குகளைக் குறிவைக்கிறார், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வாக்குகளைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார், அதனால் நம் கூட்டணியின் வெற்றிக்கு அவர் இடையூறாக இருக்கிறார் என்று என்னை விட யாரும் அதிகமாக விமர்சிக்கவில்லை. தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ கூட அந்த அளவுக்கு விமர்சிக்கவில்லை.

தமிழகத்தில் ஏதேனும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அதன் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே த.வெ.க.வுக்கு விசிக ஆதரவு அளித்தது.

இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முழுமையாகப் பேசி, அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகே த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பதாக வி.சி.க.அறிவித்தது.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.