Also Watch
Read this
தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் முறைப்படி பதவியேற்று பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
சட்டப்பேரவை முதல் கூட்டம்
17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11ஆம் தேதி தொடங்கியது. தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதலமைச்சர் விஜய் உட்பட பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.

தமிழக முதலமைச்சராக விஜய்
தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய், மே 10ஆம் தேதி பதவியேற்றார். இதனை தொடர்ந்து, தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.வி.கருப்பையாவை நியமிப்பதற்கான கோப்பில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம், பேரவைச் செயலர் சீனிவாசன் ஒப்புதல் பெற்றார்.
தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம்
ஆளுநர் மாளிகையில், தற்காலிக பேரவைத் தலைவராக கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், முதல்வர் விஜய், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பு
இந்நிலையில், 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11ஆம் தேதி காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

உறுப்பினர்கள் உறுதிமொழி
சரியாக 9.30 மணிக்கு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தற்காலிக சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலமைச்சர் விஜய் பதவியேற்பின்போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார்.
தனித்தனியாக அதிமுக
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பது பேசு பொருளாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved