news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விஜய், தவெக-வால் சுழலும் அறிவாலய கூட்டணி
tv

Also Watch

tv

Read this

விஜய், தவெக-வால் சுழலும் அறிவாலய கூட்டணி

வெடித்து கிளம்பும் பின்னணி என்ன?

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்று, பயங்கர குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேர்தலுக்கு பிறகும் கூட திமுக கூட்டணியில் சுமூகமாக போக்கு இல்லை என்பது கவனிக்க வைத்துள்ளது. திமுக உரிய அங்கீகாரம் தர மறுத்து விட்டதாக, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஆதங்க குரல் எட்டிப் பார்க்க, கூட்டணி ஆட்சி என காங்கிரஸ் மீண்டும் கொளுத்தி போட, ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து மே 4ஆம் தேதிக்கு பிறகு முடிவு சொல்வேன் என பிரேமலதாவும் பொடி வைத்து பேசியிருப்பது, தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.



திமுக மெகா கூட்டணி
தேர்தலுக்கு முன்பு தான் திமுக கூட்டணியில் இடியாப்ப சிக்கல் இருந்தது என்றால், தேர்தலுக்கு பின்பும் கூட சுமூகமாக இல்லை என்பது பொது வெளியிலேயே தெரிய தொடங்கியிருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கனவுடன், சுமார் 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சட்டமன்ற தேர்தலை சந்தித்தது திமுக. ஆனாலும், தவெக தலைவர் விஜய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக யார் ஆட்சியை பிடிப்பது என கடைசி வரை கணிக்க முடியாத சூழலாக இருந்து வருகிறது.

மாற்றம் வேண்டும் என எழுச்சி
இந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தேர்தலின்போது இடது சாரிகளுக்கு திமுக உரிய அங்கீகாரத்தை கொடுக்க மறுத்து விட்டது என ஆதங்கத்தை கொட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், இளைஞர்கள் மத்தியில் ஒரு வித கொந்தளிப்பு இருப்பதாக கூறிய பாலகிருஷ்ணன், மாற்றம் வேண்டும் என்ற மிகப்பெரிய எழுச்சி இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது என கூறினார்.

திமுக கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கியதை விட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டன. கூடுதல் தொகுதிகள் வேண்டும் என விடாப்பிடியாக இருந்த கம்யூனிஸ்ட், கடைசியில் திமுக ஒதுக்கிய தொகுதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில் பாலகிருஷ்ணன் பேசியிருப்பது கவனிக்க வைத்துள்ளது. அப்படியெனில் விஜயை சிபிஎம் வெளிப்படையாகவே வரவேற்கிறதா? என கேள்விகள் எழுந்திருக்கின்றன.

வீடியோ வெளியிட்ட திருமாவளவன்
பாலகிருஷ்ணன் பேட்டி ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்கும் முன்பே, வழக்கம் போல, திருமாவளவன் வெளியிட்ட வீடியோ இன்னும் சர்ச்சையை கூட்டியுள்ளது. கூட்டணி கட்சியினருக்காக விசிகவினர் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதை திடீரென ஒப்புக் கொண்ட திருமாவளவன், திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்றால் அதற்கு முக்கிய காரணமே விசிகவின் உறுதியான நிலைப்பாடு தான் எனக் கூறியிருக்கிறார். மாற்றம் என்ற பெயரில் வேறு முடிவுகளை எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும் என திருமாவளவன் கூறியிருக்கிறார்.

பெரும்பான்மை கிடைக்குமா?
அதாவது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவை, எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தது. ஆனால், விஜய்யின் அழைப்பை திருமாவளவன் நிராகரித்த நிலையில், அதனை சுட்டிக்காட்டும் வகையிலேயே திருமாவளவன் குறிப்பிட்டு பேசி இருப்பதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே குழப்பமாக இருந்து வரும் நிலையில், கூட்டணியில் விசிகவின் பங்கை ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் திருமாவளவன் பேசியிருப்பதாக பார்க்கப்படுகிறது.



பிரேமலதா உறுதி
இது ஒரு பக்கம் இருக்க, திமுக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அடுத்து என்ன நடவடிக்கை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மே 4ஆம் தேதி முடிவுகள் வந்த பிறகு சொல்கிறேன் என பொடி வைத்து பேசியிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

உரிமையை கேட்டுப் பெறுவோம்
தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் பங்கு என பேசி திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி வந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகும் கூட அதே நிலைப்பாட்டில் இருப்பதை கிரிஷ் ஜோடங்கரின் பேட்டி உணர்த்தியிருக்கிறது. தேர்தல் வெற்றிக்கு பிறகு தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெறுவோம் எனவும், அதிகாரமற்ற நிலையில் காங்கிரஸ் இருக்காது எனவும் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூறியிருக்கும் நிலையில், ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் திமுக கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கும் முடிவில் காங்கிரஸ் இருக்கிறது என்பதும் உறுதியாகிறது.

கருத்து, விவாதங்கள்
திமுக - காங்கிரஸ் உறவில் தேர்தலுக்கு முன்பே விரிசல் விழுந்த நிலையில், தற்போது வரை ராகுல் காந்தி எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருந்து வருகிறார். அப்படி இருக்கையில், மே 4ஆம் தேதிக்கு பிறகு இருதரப்பு கூட்டணி உறவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி வரும் கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

Related Link
மீண்டும் மீண்டும் விளக்க வீடியோ, என்ன சொல்ல வருகிறார் திருமா?

மீண்டும் மீண்டும் விளக்க வீடியோ, என்ன சொல்ல வருகிறார் திருமா?

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாக்கு எண்ணிக்கை - தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

9
48 mins agoshare
வாக்கு எண்ணிக்கை - தேர்தல் அதிகாரியிடம் திமுக மனுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved