Also Watch
Read this
By: Web Team

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர்களிலேயே கவனம் ஈர்த்தவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். சீனாவுக்கு, இவர் வந்த பிரத்யேக ரயிலை தான் உலகமே உற்று நோக்குகிறது.
வடகொரிய அதிபராக 2011ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து பெரும்பாலும் தனது தொலை தூரப் பயணங்களுக்கு, கிம் ஜாங் உன், இந்த ரயிலை தான் தேர்வு செய்கிறார். கிட்டத்தட்ட ஏழு சர்வதேச பயணங்களை இந்த ஆலிவ் பச்சை ரயிலில் தான் நிகழ்த்தி உள்ளார்.
‘தாயாங்கோ’ (Taeyangho) என்று இந்த ரயில் அழைக்கப்படுகிறது. கொரிய மொழியில் ‘தாயாங்கோ’ என்பது ‘சூரியன்’ என்று பொருள். இது வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்-ஐ நினைவுபடுத்தும் சின்னம்.
இந்த சிறப்பு ரயிலில், மொத்தமாக 90 பெட்டி உள்ளது. ஒரே ரயிலாக இன்றி, 90 பெட்டிகளும், மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதலில், அதிபர் செல்ல உள்ள பாதையில் எந்த தடையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது. 2வது, அதிபர் பயணம் செய்யவும், 3வது அதிபரின் தனிப்படை பாதுகாப்பு வீரர் குழு, மருத்துவக் குழு பயணம் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயிலின் பெட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதுடன், செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளும் உள்ளன. இதை தவிர, போதுமான அளவிலான ஆயுதங்கள், ஏவுகணைகளை வழி மறித்து தாக்கும் பாதுகாப்பு வசதியும் உண்டு. முக்கியமாக, ரயிலில் ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. இக்கட்டான சூழலில் தப்பிக்க அதிநவீன ஹெலிகாப்டரை வைத்துள்ளனர்.
நவீன தொழில்நுட்ப வசதியில், பிற நாடுகளின் எல்லைக்குள் நுழையும் போதும், திரும்பும் போதும் இந்த ரயிலின் சக்கரங்கள் மாற்றப்படுகிறது.
மணிக்கு அதிக பட்சம் 55 - 60 கிமீ வேகத்தில் மிக மெதுவாக நகரும் இந்த ரயிலில், சீனாவுக்கு போக 20 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூடுதல் உபகரணங்களுடன் எடை அதிகமாக இருப்பதால், மணிக்கு 55 கிமீ் என்று, அதாவது மணிக்கு 35 மைல் வேகத்தில் மட்டுமே நகரும். 90 பெட்டிகளையும், உள்ளே நிரம்பிய அனைத்து பொருட்களையும் இழுத்துச் செல்லவே இந்த வேகம்.
கடந்த 2018ஆம் ஆண்டில் இளஞ்சிவப்பு சோஃபாக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நேர்த்தியான ரயில் பெட்டியில் கிம் ஜாங்-உன், சீன உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசும் காட்சி வெளியாகி, முதன்முதலாக பிரமிக்க வைத்தது. 2020ஆம் ஆண்டு புயல் பாதித்த பகுதிகளுக்கு, கிம் ஜாங்-உன் சென்ற ரயிலின் காட்சிகளை வட கொரிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.

இந்த ரயிலின் அனைத்துப் பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. குண்டு துளைக்காத ஜன்னல் மற்றும் வெடி பொருட்களிலிருந்து பாதுகாக்க வலுவூட்டப்பட்ட சுவர் மற்றும் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மட்டும் அல்ல ராக்கெட் லாஞ்சரால் கூட இந்த ரயிலை தாக்க முடியாது. இதனால் தான், ’கவச ரயில்’ என்றும் ’நகரும் இரும்புக் கோட்டை’ என்றும் சொல்கிறார்கள்.
பியோங்யாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரே மாதிரியான பல ரயில்களை கிம் வைத்துள்ளார். இந்த ரயில், சுமார் 579 மீட்டர் நீளத்துடன் குண்டு துளைக்காத கண்ணாடிகளை உடைய 20 முதல் 25 கவச பெட்டிகளையும் கொண்டுள்ளது.
அதிபர் கிம்-ன் ஆஃபீஸ், படுக்கை அறை, குளியலறை, ஆடம்பர உணவகம், சாட்டிலைட் போன் வசதி, ஏவுகணை ஏவும் வசதி, விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு வசதி, ஒரு ஹெலிகாப்டர், 2 கவச மெர்சிடிஸ் கார், டிவி, பாதுகாப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களை அழைத்து செல்ல தனி பெட்டி என்று வசதிக்கு குறையே இல்லை.
ரயிலுக்குள் பிரத்யேக Barbeque உணவகம் உள்ளது. இதில், சீனா, ரஷ்யா, கொரியா, ஜப்பான் மற்றும் பிரெஞ்சு உணவுகள் தயாரிக்கப்படுகிறது. தென் கொரியாவின் நிலத்தடியில் உள்ள ரகசிய அரண்மனைகளை இந்த ரயிலில் மூலம் மட்டுமே அணுக முடியுமாம்.
ரயில் பயணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, 100க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வார்கள்; பாதுகாப்பை சரிபார்க்க ஒரு ஹெலிகாப்டர் மற்றும் கண்ணிவெடி கண்டுபிடிப்பானுடன் கூடிய பாதுகாப்பு ரயில் முன் செல்லும்.
ரகசியங்களின் கோட்டையாக கருதப்படுவது வட கொரியா மட்டுமல்ல அதிபர் கிம் மட்டுமல்ல... இந்த ரயிலும் தான்...
சொல்லப்போனால், அதிசயங்கள் அசந்து போகும் அதிசயம் தான்...
இதையும் பாருங்கள்; ’ஜம்’மென்று வந்த ’கிம்’.. அதிபரோடு கவனம் ஈர்த்த "நகரும் இரும்புக் கோட்டை" | Kim Jong | Parade