தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் புஷ்பா 2 படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி தாய் பலியான நிலையில் அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அல்லு அர்ஜுனை காண ஆர்வத்தில் ரசிகர்கள் தறிக்கெட்டு ஓடியதால் நிகழ்ந்த விபரீதம்.புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தறிகெட்டுத் திரண்ட ரசிகர்கள் அல்லு அர்ஜுனை காண வேண்டுமென்ற ஆர்வத்தில் கண்ணுமுன்னு தெரியாமல் ஓடியதில் பறிபோனது தாயின் உயிர்...கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதை பெற்று தந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் புஷ்பா 2 ரிலீஸாகியது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு சிறப்பு காட்சி திரையிடப்பட்ட நிலையில் அல்லு அர்ஜூனின் ரசிகர் பட்டாளம் திரண்டது. அப்போது திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்ததையறிந்து ரசிகர்கள் கேட் வழியாக கட்டுக்கடங்காமல் தறிக்கெட்டு ஆர்வத்தில் ஓடினர். திரையரங்க வளாகத்தில் கொண்டாட்டமும், குதுகலமாகவும் இருந்த ரசிகர்கள் அல்லு அர்ஜுனை கண்டதும், ஆர்வத்தின் உச்சிக்கே சென்றனர். காரின் சன் ரூப் வழியாக எழுந்து ரசிகர்களை குஷிப்படுத்திய அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்களோ பேப்பரை கிழித்தெறிந்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் போட்ட புஷ்பா என்ற கோஷத்தில், குடும்பத்தினருடன் வந்த தாய் மற்றும் அவரது மகன் நெரிசலில் சிக்கி தவித்த சத்தம் யாருக்குமே கேட்காமல் அடங்கி போனது. ஐதராபாத்தின் தில்சுக் நகரை சேர்ந்த பாஸ்கர் தனது மனைவி ரேவதி மற்றும் இரண்டு குழந்தைகளான ஸ்ரீ தேஜ் மற்றும் சன்வீகா ஆகியோருடன் புஷ்பா 2 பட சிறப்பு காட்சியை காண வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலால் ரேவதியும் அவரது மகன் ஸ்ரீ தேஜும் மூச்சு விடமுடியாமல் சிக்கிக்கொண்டனர். அதிலிருந்து வெளிய வரவே முடியாமல் இருவரும் ஒருக்கட்டத்தில் மயக்கமடைந்தனர். இதனையடுத்து மயங்கி கிடந்த சிறுவனை மீட்ட போலீசார், கால், கைகளை தேய்த்து முதலிதவி அளித்து காப்பாற்ற துடியாய் துடித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தாய் ரேவதி உயிரிழந்தார். மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.