உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, காலணியை வீசி தாக்க முயன்ற சம்பவம் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோரை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சனாதன சக்திகளிடம் இருந்து ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பூந்தமல்லி: வழக்கறிஞர்கள் சாலையை மறித்து கண்டன முழக்கமிட்டனர். பூந்தமல்லி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்த வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். நீதிபதிகளுக்கு எதிரான போக்கை கண்டிப்பதாகவும் இந்தப் போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீதான தாக்குதலை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு நாள் மட்டும் அனைத்து நீதிமன்றங்களில் இருந்து விலகி இருப்பது என முடிவெடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரக்கோணம், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததன் பேரில் அனைத்து வழக்கறிஞர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.பெரம்பலூர்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமரியாதை செய்த வழக்கறிஞரை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேஷன் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் கிஷோர் சர்மா மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர் சிவசங்கர் தலைமையில் வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.