news-tamil-logo

3/18/2026, 11:51:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தேன் கூட்டில் கல் எறிந்த பிரவீன் சக்கரவர்த்தி
tv

Also Watch

tv

Read this

தேன் கூட்டில் கல் எறிந்த பிரவீன் சக்கரவர்த்தி

திமுகவின் பொறுமையை சோதிப்பது ஏன்?

Posted on: Feb 16, 2026 07:36 AM

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி, அந்த தோற்றத்தை குலைப்பது போல் கருத்து பதிவிட்டு இருப்பது பூகம்பத்தை கிளப்பியுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது மூடநம்பிக்கை என கூறியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, அதற்கான எடுத்துக் காட்டாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலை விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம், திமுகவின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் வகையில், முஷ்டியை முறுக்கும் அளவுக்கு வந்திருப்பது, திமுகவின் பொறுமையை சோதிக்கும் நிலையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை, காங்கிரசில் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி தற்போது வரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும், வியூக வகுப்பாளராகவும் அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, ஒருபடி மேலே சென்று, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக கருத்து கூறி இருப்பது தேன் கூட்டில் கல் எறிந்ததைப் போல் அமைந்திருக்கிறது.

5 மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தோல்வி
மகளிர் உரிமைத் தொகை என்பது ஒரு சிறந்த நலத்திட்டம் என்றும் அதை செயல்படுத்தியது பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை என, நம்பிக்கையை உடைக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றன எனவும், 5 மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தோல்வியடைந்தன என்றும் கருத்து கூறி இருப்பது அரசியல் அபசகுனம் போல் பார்க்கப்படுகிறது.

அந்த 5 மாநிலங்களிலும்...
மகளிருக்கான திட்டத்தை அறிவித்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தங்களது சொந்த கட்சியே ஆட்சியை இழந்திருக்கிறது என்ற பட்டியலை பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். டெல்லி, தெலங்கானா, ஆந்திராவிலும் தேர்தலுக்கு முன்பு இதேபோல் அறிவித்து, அங்கு ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்ததாக அவர் பதிவிட்டிருப்பது புதிய புயலை கிளப்பியுள்ளது. இதேபோன்ற திட்டங்களை அறிவித்து, மத்தியப்பிரதேசத்தில் பாஜகவும், மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் பாஜகவின் என்டிஏ கூட்டணியும் ஆட்சியை தக்க வைத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதையும் பிரவீன் சக்கரவர்த்தி சுட்டிக் காட்டியுள்ளார். அதேவேளையில், பிரவீன் சக்கரவர்த்தி சுட்டிக் காட்டியுள்ள அந்த 5 மாநிலங்களிலும் வெவ்வேறு பிரச்சனைகள் இருந்ததையும் நினைவு கூர வேண்டிய அவசியம் உள்ளது.

காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணி
ஆந்திராவை பொருத்தவரை முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியது, எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கல் நடவடிக்கை ஆகியவை ஜெகன் மோகன் ரெட்டிக்கு தோல்வியை தேடித் தந்தது. ராஜஸ்தானில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவி வரும் "ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி மாறும்" என்ற தனித்துவமான போக்கு, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி, சாதி அடிப்படையிலான வாக்கு வங்கி மற்றும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வு போன்றவை காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது.

அரசியல் நிபுணர்கள் கருத்து
தெலங்கானாவை பொருத்தவரை ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி போன்ற குற்றச்சாட்டு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகியவை பி.ஆர்.எஸ். கட்சியை மக்கள் ஓரம் கட்ட காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. சத்தீஸ்கரில் பாஜகவின் பிரச்சார வியூகம், மாநில காங்கிரஸ் தலைமையில் நிலவிய உட்கட்சி பூசல், ஆதிவாசி வாக்குகள் மாற்றம் ஆகியவை ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்ததாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்ததற்கு பல காரணங்கள் அனைவரும் அறிந்ததே. அங்கு இந்தியா கூட்டணியில் நிலவிய குழப்பம், 10 ஆண்டுகால ஆம் ஆத்மி என மக்களிடையே ஏற்பட்ட சலிப்பு, ஊழலற்ற ஆட்சி என்ற ஒற்றை முழக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் எழுந்த புதிய புதிய ஊழல் புகார்கள், கெஜ்ரிவால் 45 கோடி ரூபாய் செலவில் பங்களாவில் ஆடம்பர வசதிகளை செய்து கொண்டதாக கூறி அதற்கு ஷீஷா மகால் என பெயரிட்டு பாஜக பிரச்சாரம் செய்தது ஆகியவை கெஜ்ரிவாலின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?
இதுபோல், பிரவீன் சக்கரவர்த்தி சுட்டிக் காட்டிய ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடிய நிலையில், மகளிர் உரிமைத் தொகை என்ற ஒன்றை மட்டுமே திமுக நம்பி இருப்பது போல பிரவீன் சக்கரவர்த்தி கருத்து கூறி இருப்பது, கூட்டணி புகைச்சல் மீண்டும் தீயாக மாறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த சலசலப்பும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் கவனமாக இருக்கும் நிலையில், முற்றுப்புள்ளியில் இருந்து மீண்டும் கோடு வரையும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடப்படுமா? என்பதே தற்போது திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Related Link
இனி திருப்பி அடிப்போம் - மாணிக்கம் தாகூர்

இனி திருப்பி அடிப்போம் - மாணிக்கம் தாகூர்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 3 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved