Also Watch
Read this
தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர், துணை சபாநாயகராக துறையூர் எம்.எல்.ஏ. ரவி சங்கர் தேர்வாகி உள்ளனர்.
சபாநாயகர் - வேட்பு மனு
சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுதற்காக ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று மே 11ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ
கடந்த ஜனவரி மாதம், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிரபாகர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை 15,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றிபெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளரான அன்பழகனை வீழ்த்தி வெற்றிபெற்றார். சட்டமன்ற நடைமுறைகளில் அவருக்குள்ள அனுபவத்தை கருத்தில் கொண்டே, அவரை சபாநாயகர் வேட்பாளராக விஜய் தேர்வு செய்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சபாநாயகர் பிரபாகர்
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் சார்பில் யாராவது வேட்புமனுத் தாக்கல் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை அவ்வாறு தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை இதற்கான தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் நடைபெறும்.

சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு
இந்நிலையில், சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு உறுதியாகி உள்ளது. துணை சபாநாயகராக துறையூர் எம்.எல்.ஏ. ரவி சங்கர் தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மே 12 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கு வேறு யாரும் போட்டியிடாததால் தேர்வாகி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved