Also Watch
Read this
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டுமென்பதில் உறுதியாக நின்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்களின் நிழலில் அரசியல் செய்து வெற்றி எனும் லாபத்தை பார்ப்பதைவிட கடைசி காலம்வரை தனித்துப்போட்டியிட்டு தோல்வி எனும் நஷ்டத்தை சந்திப்பதே மேல் என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார்.

ஒரு சிற்றூரில் பிறந்து தற்போது தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமையாக வளர்ந்து வலம்வரும் சீமான், திராவிட கட்சிகளை அறவே வெறுப்பது ஏன்? 3 முனைபோட்டி என்பதைதாண்டி 4 முனைப்போட்டியை உடைத்து 2026ஐ சீமான் தனதாக்குவாரா? என்பதுகுறித்து விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.

சிவகங்கை சீமையில்...
”எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான், இங்கிருந்தாலும் அயலான் அயலான்தான்” என 16 ஆண்டுகளாக முழங்கி கொண்டிருக்கும் சீமான் 1966 நவம்பர் 8 அன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் என்ற சிற்றூரில் பிறந்தார். செந்தமிழன் - அன்னம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த இவர் தனது சொந்த ஊரிலேயே 5 ஆம் வகுப்புவரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஹாஜி கே.கே.இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 இளையான்குடியிலும் படித்தார்.
அடுத்து, அதே ஊரில் உள்ள ஜாகிர் ஹுசைன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரத்தை நிறைவு செய்தார் சீமான். புத்தகம் சுமக்கும் காலங்கள் முடிந்தது, அடுத்து என்ன? என்ற கேள்வி எழ சினிமா இயக்குநராக வேண்டும் என ஆசை உந்தி தள்ளியது.

பாஞ்சாலங்குறிச்சியில் சீமான்
ஒன்றிரண்டு ஆடைகளை தோள்பையில் திணித்துக்கொண்டு 1991ல் சினிமா கனவோடு சென்னை புறப்பட்டார். வந்து இறங்கியதும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா என்ன? இயக்குநர் மணிவண்ணன், பாரதிராஜா உள்ளிட்ட அப்போதைய டாப் இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அவர்களிடம் கற்றுக்கொண்ட வித்தையை வைத்து 1996ல் பாஞ்சாலாங்குறிச்சி திரைப்படத்தை இயக்கினார் சீமான். கிராமத்து பின்னணியை கொண்ட இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, அடுத்தடுத்த 2 ஆண்டு இடைவெளிகளில் இனியவளே, வீரநடை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் நினைத்த அளவிற்கு போணியாகவில்லை.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தம்பி
அதன்பிறகு, 6 ஆண்டுகள் கழித்து நடிகர் மாதவனை வைத்து தம்பி என்ற படத்தை இயக்கினார். சமூக கருத்துக்கள் நிறைந்த இந்த படத்தில் புரட்சிமிக்க வசனங்கள் இருந்ததால் யார் அந்த இயக்குநர் சீமான் என சினிமா ரசிகர்களை உற்றுநோக்க வைத்தது. இந்த படம் மக்கள் மத்தியில் மட்டுமல்ல வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப்பின் சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் ஒரு இடத்தில் கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தாமல் எடுத்து அசத்திய சீமான் திரைத்துறையில் மற்றொரு முத்திரையை பதித்தார்.

அதன்பிறகு, பள்ளிக்கூடம், மகிழ்ச்சி, மாயாண்டி குடும்பத்தார், பொறி, எவனோ ஒருவன், தவம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றை தானே எழுதி பாடியும் இருந்தார்.

இப்படி திரைத்துறையில் வெற்றியும், தோல்வியும் கலந்து ஏதோ செய்து கொண்டிருந்தாலும் அதேகாலகட்டத்தில் சாதி ஒழிப்பை மையமாக வைத்தும், பெரியாரிய கொள்கைகளை கொண்டும் சீமான் திராவிடர் இயக்க மேடைகளில் பேசியதை கேட்க ஆட்கள் கூட்டம் கூடியது.

அரசியல் மேடைகளில் சீமான்
ஏற்கனவே சீமானின் தந்தை செந்தமிழன் தீவிர காங்கிரஸ் தொண்டராக இருந்ததால் அதனை பார்த்து வளர்ந்த சீமானுக்கு தனது பள்ளிப்பருவத்திலும், கல்லூரி காலத்திலும் திராவிட இயக்க சிந்தனைகள் எட்டிப்பார்த்தது. அதனாலேயே தனது நோட்டுப்புத்தகத்தில்கூட உதயசூரியன் படத்தையே உதிக்கவிட்டு ரசித்தாராம். அதோடு, அரும்புமீசையும் எட்டிப்பார்க்க திராவிட இயக்க வரலாறுகளையெல்லாம் பெரியவர்கள்போன்று நண்பர்களுடன் படிக்கும்காலத்திலேயே சேர்ந்து விவாதித்துள்ளாராம். அடுத்த சில ஆண்டுகளிலேயே, மேடைகளில் பெரியாரிய கொள்கைகளை பேச சீமானின் பேச்சு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் காதில் விழுந்துள்ளது. அதனால், கருணாநிதியின் அன்பு பார்வை சீமான் மீது விழ கோபாலபுரம் இல்லத்திற்கு அடிக்கடி சென்றுவரும் அளவிற்கு செல்வாக்கும் பெற்றார். அதன் விளைவாக 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

சீமானின் 10 நிமிட உரை வைரல்
2008 இறுதியில் ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழ் திரையுலகினர் சேர்ந்து ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், சீமான் பேசிய 10 நிமிட உரை இணையதளங்கள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது பேச்சை நேரலையில் பார்த்த இளைஞர்கள் சீமானை பின்தொடர ஆரம்பித்தனர். இதனிடையே தேசிய கட்சிகளையும் திராவிட கட்சிகளையும் நம்பி பயன் கிடையாது நமக்கென்று ஒரு படை கட்டுவோம் நமக்கான உரிமைகளை நாமே மீட்டெடுப்போம் என்று முடிவு செய்து 2010 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ஏற்கனவே சி.பா. ஆதித்தனாரால் தோற்றுவிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியை மீட்டுருவாக்கம் செய்து நாம் தமிழர் கட்சியாக அதிகாரப்பூர்வமாக சீமான் அறிவித்தார்.

நாம் தமிழர் தனித்துப்போட்டி
தனித்துப்போட்டியிடுவது என்ற முடிவில் உறுதியான சீமான் 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் முதல்முறையாக தனித்து களமும் கண்டார். 2016 தேர்தலில் நா.த.க.விற்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கிடைத்தது. ஒரு மெழுகுவர்த்தி திமுகவை அழிக்க, மற்றொரு மெழுகுவர்த்தி அதிமுகவை அழிக்க, நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி தரும் வெளிச்சம்போல என சீமான் கர்ஜித்த கடலூர் உட்பட 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3.87 சதவிகித வாக்குகளை பெற்றது நாம் தமிழர் கட்சி. இது தோல்விதான் என்றாலும் வாக்கு வங்கியை பொறுத்தவரை முன்னேற்றம்தான். அதனால் சீமானுக்குமே சற்று மகிழ்ச்சிதான்.

3ஆவது வாக்கு வங்கி
அடுத்து, 2020ல் நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரியில் ஒரே ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியை பெற்றது நா.த.க. அதோடு, முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஊராட்சி மன்றத் தலைவர்களாகவும் ஆனார்கள். அப்போது, கிராமப்புறங்களை எட்டிப்பிடித்துவிட்டோம் என நெஞ்சை நிமிர்த்தினார் சீமான். தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் 234 தொகுதிகளிலும் களமிறங்கிய நா.த.க. 6.7 சதவீத வாக்குகள் பெற்று 3ஆவது பெரிய வாக்கு வங்கி உடைய கட்சியாக தலைதூக்கியது.

”ஏர்கலப்பை சுமக்கும் விவசாயி”
2024 நாடாளுமன்ற தேர்தலில் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் மைக்கும் தனக்கு இணக்கம்தான் எனக்கூறி மைக் சின்னத்தில் போட்டியிட்ட நா.த.க 8.22 சதவீத வாக்குகளை பெற்று அரசியல் களத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தடம்பதித்தது. தன்னுடைய முகத்தையே சின்னமாக வரைந்து, ஏர்கலப்பை சுமந்துகொண்டு நிற்பதுபோல வடிவமைத்து ”ஏர்கலப்பை சுமக்கும் விவசாயி” என தனது சின்னத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்த சீமான் அதே குஷியிலேயே 2026 தேர்தலை எதிர்கொள்ளவும் ஓராண்டுக்கு முன்பே பணிகளில் இறங்கிவிட்டார்.

234 தொகுதிகளிலும் போட்டி
வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை திருச்சி மாநாட்டில் அறிவித்தார் சீமான். ஆண் வேட்பாளர்களையும், பெண் வேட்பாளர்களையும் சரிசம எண்ணிக்கையில் களமிறக்கி உள்ள சீமான் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக திருநங்கை ரோஷினியை இறக்கி உள்ளார். ஆண் வேட்பாளர்களில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் சீமான். அதேபோல் 18க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு முடித்தவர்களே வேட்பாளர்களாக உள்ளனர். சம உரிமை மற்றும் பாலின சமத்துவத்தை எதிரொலிக்கும்வகையில் சீமானின் வேட்பாளர் பட்டியல் உள்ளதாக பலர் பாராட்டியும் வருகிறார்கள்.

ஒருநாளும் பின்வாங்கமாட்டேன்
'2016 லட்சியம்.. 2021 நிச்சயம்' என்ற முழக்கத்தோடு இரண்டு சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த சீமானுக்கு வெற்றி கிட்டவில்லை என்றாலும் கணிசமாக வாக்கு சதவீதம் உயர்ந்து 2024 தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது பெரிய மாநில கட்சியாக வளர்ந்து நிற்கிறது. வெற்றியோ தோல்வியோ தனித்துப்போட்டி என்ற முடிவில் இருந்து ஒருநாளும் பின்வாங்கமாட்டேன் என சீமான் ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் அரசியல் அவதாரமோ மும்முனை போட்டி என்பதை தாண்டி விஜயின் வருகையால் 4 முனை போட்டியாக விரிவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்களுடைய ஆட்சி வேண்டும் என ஓங்கி ஒலித்து வரும் சீமானின் சின்னமான 'ஏர் கலப்பை சுமந்த விவசாயி' நல்ல மகசூலை பார்க்குமா? என்பதை தேர்தல் அறுவடை நாளான மே 4ஆம் தேதி தெரிந்துவிடும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved