Also Watch
Read this
திமுக உடனான பல ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் ஐக்கியமாகியிருக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி பந்தம் முடிவுக்கு வந்தது ஏன்? விஜய் பக்கம் ராகுல் காந்தி சாய்ந்தது எப்படி?

தேர்தலுக்கு முன் இருந்தே...
தேர்தலுக்கு முன்பு நிகழுமா, நிகழாதா? என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தி - விஜய் காம்போ, தேர்தலுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. ஆம், ஒரு வழியாக பனையூரும், பவனும் கை கோர்த்திருக்கிறது. எதிர்பார்த்தபடியே தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அமைந்திருக்கும் நிலையில், பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும் தவெக, ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தவெக முறைப்படி கடிதம் எழுதியிருந்தது.

பனையூருக்கு வந்த காங்கிரஸ்
தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை அடுத்து சென்னையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் நட்சத்திர விடுதியில் வைத்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் சட்டமன்ற கட்சி தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வகுப்புவாத சக்திகளை அதாவது பாஜகவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு அளித்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆலோசனையை முடித்த கையோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பனையூர் நோக்கி புறப்பட, விஜய்யும் நீலாங்கரை இல்லத்தில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

தவெக அணியில் காங்கிரஸ்
இதனையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். பனையூர் வந்திருந்த காங்கிரஸின் செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ஜமால் முகமது யூனுஸ், மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன், குளச்சல் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், விளவங்கோடு எம்.எல்.ஏ. பிரவீன், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஆகிய 5 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் விஜயிடம் வழங்கப்பட்டது. திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்டு 5ல் வென்று, தற்போது தவெக அணிக்கு தாவியுள்ளது காங்கிரஸ்.

காங். கட்சிக்கு அமைச்சர் பதவி
இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 113 ஆக உயர்ந்தது. விஜய்யை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெறும் என்றார். அந்த வகையில், ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு சீட்டு வழங்க தவெக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி தொடரும்
2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடித்தது. 2014 மக்களவைத் தேர்தலின் போது மட்டும் கூட்டணி முறிந்தது. பின்னர் மீண்டும் 2016 சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைந்தது. திமுக - காங்கிரஸ் உறவு வலுவடைந்தது. கலைஞர் மறைவுக்கு பிறகு, காங்கிரஸிலும் சோனியா காந்தியின் செயல்பாடு குறைந்தது. ராகுல் - மு.க.ஸ்டாலின் நட்பு கூட்டணியை இன்னும் பலமாக்கியது. 2019 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக முன் மொழிந்தார் ஸ்டாலின். 2021, 2024 தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவு நீடிக்க, 2025 டிசம்பரில் இருந்தே காங்கிரஸ் வேறு முகத்தை காட்ட தொடங்கியது. தற்போது அதிகாரப்பூர்வமாக திமுக உடனான கூட்டணி உறவை முறித்து கொண்ட காங்கிரஸ், அடுத்து வரும் உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது.

ராகுல்காந்தி விருப்பம்
தேர்தலுக்கு முன்பே தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட தவெக உடனான கூட்டணிக்கு ராகுல் காந்தியும் ஒத்து வந்து விட்ட நிலையில், கடைசி நேரத்தில் சோனியா காந்தியின் தலையீட்டால் கூட்டணி அமையாமல் போனது. திமுக உடனான கூட்டணி காரணமாக ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருந்த ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது கூட மு.க.ஸ்டாலினை சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் விருப்பப்படி தேர்தலுக்கு பிறகான கூட்டணியாக தவெக - காங்கிரஸ் இணைந்திருக்கிறது.

அமைச்சரவையில் காங்கிரஸ்
1967ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் இடம் பிடிக்க முடியாமல் இருந்தது. காமராஜர் மற்றும் எம். பக்தவத்சலம் ஆகியோரின் காலத்திற்குப் பிறகு, காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்த காலகட்டத்தில் காங்கிரஸின் பலம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் காங்கிரஸால் வளர முடியவில்லை. எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக, அதிமுகவை நம்பியே இருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையை உடைத்து, மூன்றாவது சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விஜய்யை ஒரு ஏணியாக பார்க்கிறது காங்கிரஸ்.

உறவு முறிந்தது
தற்போது தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பதன் மூலம், சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் அமரப் போகிறது. திமுக என்ற திராவிட கட்சியின் எழுச்சியால் வீழ்ந்து போன காங்கிரஸ் கட்சி, மற்றொரு திராவிட கட்சியான தவெக மூலம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. காங்கிரஸின் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கூட்டணி முறிவை அடுத்து தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு திமுக செக் வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக உடன் தான் கூட்டணி
கடந்த முறை இந்தியா கூட்டணியை கட்டமைத்ததில் திமுகவின் பங்கும் முக்கியமானது என்ற நிலையில், மம்தா, கெஜ்ரிவால் உடனான நட்பை பயன்படுத்தி காங்கிரஸுக்கு எதிராக திமுக காய் நகர்த்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும் நிலையில், மம்தா, கெஜ்ரிவால், தேஜஸ்வி ஆகியோர் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியிருப்பது தேசிய அரசியலில் காங்கிரசுக்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்தாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் தவெகவுடன் தான் கூட்டணி என்ற காங்கிரஸின் முடிவை கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தவெகவை நோக்கி பாதையை மாற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved