Also Watch
Read this
முதலமைச்சராக பதவியேற்ற விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றது கவனிக்க வைத்துள்ளது. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், நாகரிகம் கருதி நிகழ்ந்த சந்திப்பு, வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தி நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

முன்னாள் முதல்வருடன் இந்நாள் முதல்வர்
முதலமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே விஜய் செய்த செயல், அரசியல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்லாமல் மறைந்து போயிருந்த அரசியல் நாகரீகத்தை மீட்டு கொண்டு வந்திருக்கிறது.
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா முடிந்ததும் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்றார். அங்கு முதலமைச்சர் விஜய்யை, வாசலிலேயே நின்று உதயநிதி ஸ்டாலின் வரவேற்க, இருவரும் பரஸ்பரம் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, மு.க.ஸ்டாலினும் முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி, வாஞ்சையுடன் கையை பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல, இருவரும் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர். பின்னர், முன்னாள் துணை முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலை பரிசாக அளித்தார். சந்திப்பு முடிந்து திரும்பும் போதும், விஜய்யை வாசல் வரை வந்து உதயநிதி ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

வைகோ உடன் சந்திப்பு
இதனையடுத்து, அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டுக்குச் சென்றார் முதலமைச்சர் விஜய். காரை விட்டு இறங்கிய முதலமைச்சர் விஜய்க்கு, பட்டுத் துண்டு அணிவித்து மாலை அணிவித்து வரவேற்று, துரை வைகோ வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அதேபோல, விஜய்யை ஆரத்தழுவி அழைத்துச் சென்ற வைகோ, மீண்டும் மாலை அணிவித்து பட்டுத் துண்டு அணிவித்து வாழ்த்தினார்.

திருஷ்டி கழித்த பெண்கள்
பின்னர், மதிமுக நிர்வாகிகள் மற்றும் வைகோ குடும்பத்தினரை சந்தித்த முதலமைச்சர் விஜய்க்கு, தனது வீட்டு பணிப் பெண்களை வைகோ அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, இவர்களே விசிலுக்கு தான் ஓட்டுப் போட்டார்கள் என வைகோ கூற, அந்த பெண்களும் விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்தனர். அதில், பெண் ஒருவர் விஜய்யை பார்த்து திருஷ்டி கழிக்க, பதிலுக்கு முதலமைச்சர் விஜய்யும் திருஷ்டி கழித்தார். பின்னர், பணிப் பெண்களுடனும் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அன்புமணி உடன் சந்திப்பு
வைகோ உடனான சந்திப்பை முடித்து விட்டு, அக்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி வீட்டுக்குச் சென்றார் முதலமைச்சர் விஜய். அன்புமணியும், சௌமியாவும் வாசலில் வந்து நின்று முதலமைச்சரை அழைத்துச் சென்றனர். பின்னர், அன்புமணி ராமதாஸின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் விஜய்.

சீமான் உடன் சந்திப்பு
அதனை தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய்யை, வாசலிலேயே காத்திருந்து வரவேற்று ஆரத்தழுவி அழைத்துச் சென்றார் சீமான். இருவரும் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும், புத்தகமும் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

கவனிக்க வைத்த...
அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனதும் அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றிருப்பது கவனிக்க வைத்துள்ளது. 1967ஆம் ஆண்டு முதன்முதலில் பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, முன்னாள் முதலமைச்சராக இருந்த காமராஜரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதற்கு பிறகு முன்னாள் முதலமைச்சரை சந்தித்து இந்நாள் முதலமைச்சர் வாழ்த்து பெறுவது இதுவே முதன்முறை. கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆர்.-ம் நண்பர்களாக இருந்தாலும், அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த போது சந்தித்துக் கொண்டது மிக மிக குறைவு. தீவிர திமுக எதிர்ப்பை கையாண்ட எம்.ஜி.ஆர்., வரிசையில் ஜெயலலிதாவும் அந்த எதிர்ப்பில் கடுமை காட்ட, அரசியல் நாகரிகம் என்பதே வழக்கொழிந்து போனது. குறிப்பாக, ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்ட சம்பவங்கள் இரு தலைவர்கள் இடையே நீண்ட இடைவெளியை உருவாக்கியது.

வைகோ நெகிழ்ச்சி
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், தன்னை சந்தித்தது குறித்த பேட்டி அளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அண்ணா செய்ததை போல விஜய் செய்திருக்கிறார் என நெகிழ்ச்சி தெரிவித்தார். அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வாழ்த்து தெரிவித்துள்ளது. அரசியலுக்கு வந்ததும் திமுகவை அரசியல் எதிரி என அறிவித்த விஜய், ஒவ்வொரு மேடையிலும் திமுகவை மிக காட்டமாக விமர்சித்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமானும் விஜய்யை, காட்டமாக பேசியிருக்கிறார்.

பேச்சிலும் செயலிலும்...
அரசியலில் கருத்து வேறுபாடுகள், விரோதம் இருந்தாலும் மரியாதை நிமித்தமாக பண்பாடு, கலாச்சாரத்தை முன் வைத்து, அனைத்து தலைவர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்திருப்பது நல்ல முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசியல் நேர்மறையான திசையில் பயணிப்பதாக பார்க்கப்படுகிறது. நடிகராக இருந்த போதே பட விழா மேடையில் பேசிய விஜய், எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என கலைஞர், எம்.ஜி.ஆர்.ஐ குறிப்பிட்டு பேசியிருந்தார். தற்போது, முதலமைச்சர் ஆன பிறகு அதையே செயலிலும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved