Also Watch
Read this
Posted on: Feb 12, 2026 06:08 AM
By: Manigandan Raja
உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் கொள்கைகளை வகுத்து செயல்படுவதாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்க கூட்டமைப்பினரின் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் பல்வேறு துறை சார்ந்த சுமார் 30 கோடி தொழிலாளர்கள் இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக...
மத்திய அரசின் தொழிலாளா், விவசாயிகள் மற்றும் தேச விரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கை மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இன்று பிப்ரவரி 12ஆம் தேதி, ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், வங்கி, மின் விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
காலை முதல் போராட்டம்
கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காலைமுதல் தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து சங்கமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
முக்கிய கோரிக்கைகள்
நான்கு தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை, தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கை.
தமிழகத்தில்...
தமிழகத்தில், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலைமுதல் அரசுப் பேருந்துகள் பாதிப்பின்றி சீராக இயங்கின. காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved