ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வதன் நோக்கமே, அந்த இடத்தை நன்றாக சுற்றிப் பார்க்க வேண்டும், புகைப்படங்கள் எடுக்க வேண்டும், அந்த இடத்தின் சுவையான, பிரபலமான உணவுகளை உண்ண வேண்டும், நல்ல ஞாபகங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே."சுற்றிப்பார்க்க வந்துவிட்டு என்ன தூக்கம்? தூங்கவா இது வரை வந்தோம். எழுந்திரு, என்று சொல்லி இருக்க கேட்டிருப்போம்.இப்ப தூங்குவதற்காக மட்டுமே சுற்றுலா செல்வது எனும் பழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது, அதிலும் இளம் தலைமுறையினர் தூங்குவதற்காகவே சுற்றுலா செல்ல விரும்புகிறார்கள் என ஹில்டன் ஆய்வு கூறுகிறது. வித்தியாசமான இடங்களைப் பார்க்க வேண்டும், சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அல்லாமல், நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக செல்லும் சுற்றுலா அல்லது பயணமே ஸ்லீப் டூரிஸம் என கூறப்படுகிறது."விடுமுறையைக் கழிக்க அல்லது வேலையிலிருந்து ஒரு 'பிரேக்' (Break) எடுத்துக்கொள்ள என சொன்னாலும், இங்கு தூக்கமே பிரதானமாக இருப்பதாகவும் மேலும் அந்த இடத்திற்கு போகவேண்டும் என்பதில், அங்கு அமைதியாக தூங்க வசதி உள்ளதா என்ற அம்சமே முக்கிய பங்கு வகிக்கிறது." என்றும் அந்த ஆய்வு கூறுகிறது."நகரங்களில் இருக்கும் இரைச்சல், அன்றாட பரபரப்பிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இதை பலர் விரும்புவதற்கு காரணமாக இருப்பதாகவும், ஆனால், நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது நிச்சயமாக இது நல்லதல்ல" என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இதற்கு காரணம், 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது ஒரு தினசரி வழக்கமாகவே இருக்க வேண்டுமே தவிர, அதற்காக சேர்த்து வைத்து வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில் அல்லது அதற்காகவே சுற்றுலா சென்று தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் ."பலரும் நினைப்பது நேற்று 3 மணிநேரம் தூங்கிவிட்டு, இன்று 10 மணிநேரம் தூங்கினால் சரியாகிவிடும் என்று. ஆனால் மனித உடல் அப்படி இயங்குவதில்லை. தினசரி முறையாக தூங்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். "அதைவிடுத்து தூங்குவதற்காக சுற்றுலா என்பது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும்." என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.