Also Watch
Read this
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், பதவி ஏற்ற 3 நாட்களில், தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து தமிழக மக்கள், முதலமைச்சருக்கு திருஷ்டி சுற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி சுற்றி உற்சாகம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயிலடி தெருவில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூட உத்தவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு அப்பகுதி பெண்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து உள்ளனர். டாஸ்மாக் கடை மூடியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விஜய்யின் உருவப்படத்திற்கு திருஷ்டி சுத்தியும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல்
தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடியதற்கு, பெண்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். தனது மகன் எடுத்த முதல் நடவடிக்கைக்கு தலைவணங்குவதாக பெண் ஒருவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.

விஜய் அண்ணாவுக்கு நன்றி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், இந்த நடவடிக்கை ஏற்கனவே வந்திருந்தால் தனது கணவரை இழந்திருக்க மாட்டேன் என பெண் ஒருவர் வேதனை தெரிவித்தார்.

பேருந்து நிலையம் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதற்கு தமிழக முதலமைச்சர் விஜயக்கு, பெண்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்து உள்ளனர். அதே சமயத்தில், விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், முழுமையாக மதுபானக்கடைகளை மூடிவிட்டு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் கோரிக்கை
கோயில், பேருந்து நிலையம், பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே அரசு தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக்கடையை மாணவர்கள் நலன் கருதி மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடல்
கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையம், கோயில்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அருகே செயல்பட்டு வந்த 69 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதற்கு, மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். மேலும், டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் சந்து கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved