ஆபாச பேச்சுக்கு தான் அடிபணியாத நிலையில், 3 ஆண்டுக்கு ஒருமுறை அனுமதியை புதுப்பிக்கும் CPA ஆய்வுக்கான சுற்றறிக்கையை எங்கள் கல்லூரிக்கு வழங்கிய ராமகிருஷ்ணன் CPA ஆய்வாளரை அனுப்பி வைத்து அவர் மூலமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறினார். தான் ரூ.3 கோடி கொடுத்துதான் பதிவாளராக அமர்ந்துள்ளதாகவும், 10 லட்சம் கொடுக்காவிட்டால் முதல்வர் பதவியில் இருந்தே உன்னை தூக்குவதற்கு தனக்கு பவர் உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் மிரட்டியதாகவும் கூறினார்.அதற்கும் அசராமல் தாம் பணம் கொடுக்க மறுத்ததால் கல்லூரி தாளாளர் மூலமாக ராமகிருஷ்ணன் ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டதாக கூறிய பெண் முதல்வர், கடந்த மார்ச் 19 ஆம் தேதி வாட்ஸ்ஆப் காலில் தன்னை அழைத்து அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓ.கே. சொன்னால் உங்களை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்வதாக கூறினார். இதனால் பொறுமையிழந்த தாம் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார் ராமகிருஷ்ணன். இந்நிலையில், தான் அவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கக்கோரி மிரட்டல் விடுக்கும் ராமகிருஷ்ணன் தனது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் குரூப்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருவதாகவும் கண்கலங்கினார். ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு ஆசிரியர் தினமான கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு என அனைத்து இடங்களிலும் அழுது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வருத்தம் தெரிவித்தார். தனக்கு ராமகிருஷ்ணன் தரப்பில் இருந்து வரும் அழுத்தம் தாங்க முடியாததால் தற்போது ஐஜியிடம் புகார் அளித்துள்ளதாக கூறிய பெண் முதல்வர், தன்னைபோன்று ஏராளமான பெண் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் யாரும் தைரியமாக புகார் கொடுக்க வராததால் தான் பூனைக்கு மணி கட்ட வந்துள்ளதாக கூறினார்.