Also Watch
Read this
Posted on: Feb 19, 2026 08:24 AM
By: Manigandan Raja
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்க திமுகவிலேயே மும்முனை போட்டி வெடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தகால சென்டிமெண்ட்டை மனதில் வைத்து துறைமுகம் தொகுதியில் இருந்து அமைச்சர் சேகர்பாபு, ஆர்.கே.நகர் தொகுதியில் மாற ஆழம் பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ. எபினேசரும் எல்லா ரூட்டுகளிலும் சீட்டை தக்க வைக்க போராடி வருவதால் அறிவாலயம் பக்கம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம்
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் களமிறங்குவது என்ற போட்டி, அரசியல் களத்தை சூடாக்கிஉள்ளது. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் என்ன என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஆர்.கே.நகரில் போட்டியிட ஜே.ஜே.எபினேசர்...
ஆர்.கே.நகர் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது, ஜெயலலிதா முகமும், 20 ரூபாய் டோக்கனும் தான். அந்த அளவுக்கு அரசியல் வரலாற்றை தாங்கிய ஆர்.கே.நகர் தொகுதியில், கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஜே.ஜே.எபினேசர் என்பவர் போட்டியிட்டு MLA ஆனார். எம்.எல்.ஏ. ஆன பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கங்கள், குடிநீர்சேகரிப்பு நிலையம், கொருக்குப்பேட்டை மேம்பாலம், பெண்களுக்கு என கட்டணமில்லா ஜிம், அனைத்து வார்டுகளிலும் ரேஷன் கடைகள் என பல வசதிகளை செய்து கொடுத்திருக்கும் ஜே.ஜே.எபினேசருக்கு, தொகுதி மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், சில பிளாக் மார்க்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் கூட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான தூத்துக்குடி ஜோயல் மூலம் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட ஜே.ஜே.எபினேசர் காய் நகர்த்தி வருகிறாராம்.
தொகுதி மாறலாமா? என்ற யோசனை
ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக திமுகவின் வழக்கறிஞரும், பகுதி செயலாளருமான ஜெபதாஸ் பாண்டியனும் சீட்டு கேட்டு தலைமையை அணுகி வருவதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பிரச்சனை என்றாலும் வழக்கறிஞர் என்ற முறையில் உடனடியாக ஆஜராகிவிடும் ஜெபதாஸ் பாண்டியன் மீது நல்ல அபிப்ராயம் இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இருவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில், 2001 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த சேகர்பாபு, தொகுதி மாறலாமா? என்ற யோசனையில் இருக்கிறாராம்.
தற்போது, துறைமுகம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சேகர்பாபு, செண்டிமெண்ட் கனெக்ட்டாக ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்க ஆழம் பார்த்து வருகிறாராம். தனக்கு இல்லை என்றாலும் தனது வக்கீல் மகனுக்காவது ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என சேகர்பாபு தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது கடைசி வாய்ப்பு
திமுகவில் மும்முனை போட்டி என்றால், அதிமுகவில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஆர்.எஸ்.ராஜேஷ் தான் போட்டியிடுவார் என ரத்தத்தின் ரத்தங்கள் உறுதியாக சொல்கிறார்கள். திமுக அரசை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.ராஜேஷுக்கு, தலைமையிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அடிக்கடி போராட்டம் நடத்தி மக்கள் மத்தியிலும் கவனம் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.ராஜேஷ், ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஏற்கனவே பெரம்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆர்.எஸ்.ராஜேஷுக்கு இது கடைசி வாய்ப்பு எனவும் சொல்கிறார்கள் அதிமுகவினர்.
தவெகவில் யாருக்கு?
புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திலும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு குஸ்தி நடக்கிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுறா வேலு என்பவர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே பொறுப்பில் இருக்கும் சுறா வேலு மீது தலைமைக்கு நல்ல அபிப்ராயம் இருந்தாலும், கீழ்மட்ட நிர்வாகிகளிடம் பணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்களும் எழுந்து வருகிறது. ஒருவேளை தனக்கு எம்.எல்.ஏ. சீட்டு கிடைத்தால், தேர்தல் செலவுகளை அந்தந்த வட்ட செயலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கும் சுறா வேலு, அதற்கு பிராயசித்தமாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று கவுன்சிலர் சீட்டு வாங்கி தருவதாக டீல் போட்டிருக்கிறாராம்.
ஆனால், மாவட்ட செயலாளருக்கு தலைவலியாக த.வெ.க.வின் இளைஞரணி பொறுப்பாளர் கௌதம் என்பவரும் சீட்டு கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு த.வெ.க.விலேயே இரண்டு பேர் போட்டி போடும் நிலையில், த.வெ.க. தலைமையோ இருவருக்கும் கல்தா கொடுக்கும் முடிவில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
பிரபல தனியார் கல்லூரியான JPR சத்தியபாமா கல்லூரியை சேர்ந்த மரிய வில்சனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியை கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஆர்.கே.நகர் யாருக்கு?
நாம் தமிழர் கட்சியில் இருந்து அந்த கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநில நிர்வாகி வெண்ணிலா தாயுமானவன் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஆர்.கே.நகர் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved