Also Watch
Read this
By: Manigandan Raja

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சுப்புக் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி பேரூராட்சி எல்லைக்கு மிக அருகாமையில் இந்த குடியிருப்பு பகுதி அமைந்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி இப்பகுதி மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்த பகுதி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர் வடிகால், குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்குகள் என எந்தவொரு அத்தியாவசியத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிக்குள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் நடந்து கூட செல்ல முடியாமல் சேற்றில் சிக்கித் தவிக்கின்றனர்.
தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இப்பகுதி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் அருகிலுள்ள புதர்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.
மேலும், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டே இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
அதற்கு வந்த பதிலில், "தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு விட்டன" என தவறான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்தல் நேரங்களில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின் இந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சுப்புக்காலனி பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து, சாலை, மின்விளக்கு மற்றும் கழிவுநீர் வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved