உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது.மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தபோது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார். ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக 'டியெல்லா' என்ற அமைச்சரும் இந்த அரசில் அங்கம் வகிப்பார் என தெரிவித்த பிரதமர் எடி ரமா, மெய்நிகர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சர், அரசு ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிர்வகிப்பார் என்றார்.