சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் சாலை வரையிலும், மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரையிலும் என 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 2-வது திட்டத்தில் 128 ஸ்டேஷன்களை உள்ளடக்கிய 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் என்றும், தமிழக அரசின் பங்கு 22 ஆயிரத்து 228 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. இதர தொகை, நீண்ட கால அடிப்படையில் கடனாக பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.