விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் 1,519 விநாயகர் சிலைகள் அமைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் கொண்டாடும் வகையில் மாநகர் முழுவதும் 16 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருக்க கூடாது, மருத்துவமனை அருகே சிலைகள் அமைக்க கூடாது, பிற மதத்தினரை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 104 காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து, பிரச்சனை இல்லாத இடங்களில் மட்டும் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கி வருகின்றனர். போலீசாருக்கு விழா குழு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.