அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடி விடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருப்பது துரதிஷ்டவசமானது என்று அதிருப்தி தெரிவித்தது. தகுதியான பேராசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என கூறிய உயர்நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, அக்டோபர் 15-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சட்டத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.