திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்பு என கூறப்படும் நிலையில், அதற்காக பரிகாரம் செய்யும் வகையில், ஏழுமலையான் கோவிலில் ஆகம சாஸ்திர விதிப்படி சாந்தி யாகம் நடைபெற்றது. ஏழுமலையான் கோவிலுக்குள் விலங்கு கொழுப்பு கொண்டு செல்லப்பட்டதற்கு பரிகாரம் செய்வது தொடர்பாக தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தியது. இச்சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆவதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு பிறகு ஆண்டுதோறும் நடைபெறும் பரிகார பூஜையான பவித்ரோற்சவம் நடத்தப்பட்டதால் புதிதாக வேறு பரிகார பூஜை தேவையில்லை என்று கூறப்பட்டது. ஆனாலும் பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக, ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டு காலை 6 மணிக்கு யாகம் துவங்கியது.