மாவீரர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும் என வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இலங்கையில் தனி தமிழ் ஈழம் கேட்டு போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல் எப்படியோ அதேபோல தமிழ் ஈழ அரசியலும் முக்கியமானது என்பதால் அரசியல் கட்சிகள் மாவீரர் தினத்தை கடைப்பிடித்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்யும் மாவீரர் தினத்துக்கு வீரவணக்கம் செலுத்தி அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.