சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்தி மூடுவிழா நடத்த திமுக அரசு துடிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் திமுக அரசு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை மட்டும் அரசே ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று கூறி நாடகம் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். 3.16 சதவீத மின் கட்டண உயர்வால் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயரும் என வேதனை தெரிவித்துள்ளார். மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என எக்ஸ் தளம் வாயிலாக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.