தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் காவல் மரணங்களுக்குக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோவிலில் பாதுகாவலராக பணியாற்றிய அஜித் குமார் போலீஸ் காவலில் இருக்கும்போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது வேதனை அடைய செய்வதாக கூறியுள்ளார். உடற்கூறு அறிக்கையும், அஜித்குமார் உடலில் இருந்த கடுமையான காயங்களும் காவல்துறையினர் செய்யும் சித்திரவதையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அஜித்குமார் மரணம் தொடர்பாக நேரடி மேற்பார்வையுடன், ஒரு உயர் மட்ட சுயாதீன விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தமிழக அரசிடமிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்து காவல் மரணங்களின் விவர அறிக்கையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.