தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி தாம் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சி மேற்கொண்டதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி கைது செய்தது திமுக அரசு என குற்றம்சாட்டியுள்ள இபிஎஸ், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.