திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்கள், பெண் காவல் ஆய்வாளரிடம் அத்துமீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தடுப்புகளை மீறி மேடை அருகே செல்ல முயன்ற இளைஞர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், மது ஒழிப்பை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன், விசிக மது ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்களை அப்படியே நடைமுறை படுத்தவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். திருமாவளவன் பேசி கொண்டிருந்த போது முன்பகுதியில் இருந்த விசிகவினர் தடுப்புகளை மீறி மேடை அருகே செல்ல முயன்ற நிலையில், அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு கூட்டம் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேடை அருகே செல்ல முயன்ற விசிகவினரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிலர் ஆவேசமாக போலீசாரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக மாநாட்டிற்கு செல்லும் வழிக்கு எதிர் திசையில் காரில் தொங்கியபடி வந்த விசிகவினரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஆய்வாளர் பிரபாவதி தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர் மற்றும் மகளிர் அணியினர், பெண் காவலர் ஆய்வாளர் என்றும் பாராமல் அவரை இழுத்து தள்ளிவிட்டு, காரை உள்ளே அனுப்பினர். விசிக மாநாட்டில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவல் ஆய்வாளரிடம் அத்துமீறிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.