வங்க தேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, வரலாறு படைத்துள்ளது. மகளிர் கபடி உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றுகளில் எதிரணிகளை துவம்சம் செய்த இந்தியா, அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஈரான் அணியை எதிர் கொண்டது. அதில் 33 - 21 என்ற செட் கணக்கில் ஈரானை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் அதிரடியாக காலடி எடுத்து வைத்தது. இதேபோல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச அணியை வீழ்த்திய சீன தைபே அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் சீன தைபே அணி மோதின. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால், ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான ஆட்டத்திற்கு முன்னால், சீன தைபே அணி ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியது. இதையடுத்து, ஆட்ட நேர முடிவில் 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி, தனது முழு பலத்தையும் நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம். வெற்றி வாகை சூடியுள்ள இந்திய அணிக்கு முன்னாள் வீரர்களும், பயிற்சியாளர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் ஹவுர் தலைமையிலான இந்திய அணி, அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மேலும் வரலாற்று சாதனையும் புரிந்தது. இந்த வரிசையில், தற்போது கபடியில் நம் மகளிரணி கோப்பை வென்றுள்ளது இந்தியாவுக்கே பெருமைக்கு மேல் பெருமையை சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்திய மங்கைகளின் வீரம் மற்றும் பெருமை எட்டுத் திக்கும் ஓங்கி ஒலித்திருக்கிறது.