குன்றத்தூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றிய அதிகாரிகள், தடுப்புகளை வைத்து சாலையை அடைத்ததால், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குன்றத்தூர் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குன்றத்தூர் பேருந்து நிலையம் முன்பு இருந்த அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டு புதிதாக அம்பேத்கர் சிலை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையின் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்து வந்ததால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் முன் பகுதிகளை ஜேசிபி கொண்டு இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிலர் தங்களது பகுதிகளை அவர்களாகவே இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் தடுப்புகள் வைத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சில இடங்களில் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சாலை ஓர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்பு இந்த பகுதிகளில் சாலை விரிவாக்க பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.