அருப்புக்கோட்டையில் உள்ள கிராம வங்கியில் நுழைந்து திருட முயன்ற நபர்கள் எச்சரிக்கை அலார ஒலியால் பயந்து தலைதெறிக்க ஓடிய சம்பவம் நடந்துள்ளது.. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இந்த வங்கியின் பக்கவாட்டில் உள்ள சந்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு உள்ள ஜன்னலில் இருந்த மூன்று கம்பிகளை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளனர்.அப்போது கொள்ளையன் ஒருவன் வங்கியின் உள்ளே நுழைந்து கேமரா வயர் இணைப்பை துண்டிக்க முயன்ற போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்துள்ளது. உடனே பதறிபோன மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தலை தெறிக்க ஓடி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அந்நகர குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த வங்கியில் ஏற்கனவே இதே போல இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்து இருந்ததாகவும், இதனால் முன் எச்சரிக்கையாக பொருத்தப்பட்டிருந்த வங்கியின் அலாரம் ஒலித்ததால் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் தப்பியுள்ளது. அதிகாலையில் வங்கியில் நுழைந்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.